இந்தியா

விவசாயி தற்கொலை விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்: குலாம் நபி ஆசாத்

பிடிஐ

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிப் பேரணியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர சிங் தற்கொலை செய்து கொண்டார். விவசாயி தற்கொலை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் பாகத்துக்காக மாநிலங்களவை இன்று கூடியது. முதல் நாளான் இன்று விவசாயி தற்கொலை விவகாரத்தால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

பூஜ்ஜிய நேரத்தின்போது பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், "விவசாயி தற்கொலைக்கு மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் சேர்ந்தே பொறுப்பேற்க வேண்டும். தேசத்தின் அனைத்து பகுதிகளிலும் விவசாயி தற்கொலை விவகாரம் கவனிக்கப்பட்டு வருகிறது. எனவே, பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்து அவைத்தலைவர் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக இது குறித்து விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மோடி பேசினார். ஆனால், இப்போது என்ன நடந்திருக்கிறது. தற்போதைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி விவசாயி தற்கொலை சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும்" என்றார்.

குலாம் நபி ஆசாத் பேசி முடிக்க மற்ற கட்சியினரும் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் அவை நடவடிக்கையை 15 நிமிடங்கள் ஒத்திவைத்தார் அவை துணைத் தலைவர் ஹமீது அன்சாரி.

SCROLL FOR NEXT