சத்தீஸ்கர் மாநிலத்தில் யானைக் கூட்டத்தால் நேற்று 3 பெண்கள் மிதித்துக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தின், கோர்பா மாவட்டம், கரட்டாலா காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் வசிக்கும் இந்தப் பெண்கள்,
நேற்று அருகில் உள்ள வனப் பகுதிக்கு அங்கு விளையும் பொருள்களை சேகரிக்கச் சென்றனர். இந்நிலையில் 15-க்கும் மேற்பட்ட யானைகள் அவர்களை சுற்றி வளைத்தன. பெண்களை யானைகள் தாக்கியும் மிதித்தும் கொன்றதாகவும், பிறகு அந்த யானைகள் மாவட்டத்தின் சம்பா வனப் பகுதிக்கு சென்றுவிட்டதாகவும் பிராந்திய வன அலுவலர் ஜே.ஆர். நாயக் கூறினார்.
தகவல் அறிந்து போலீஸார் மற்றும் வன அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உயிரிழந்த பெண்கள், மான்குன்வார் (33), தில்குன்வார் (60), கம்லாபாய் (50) என அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு அவர்களுக்கு தலா ரூ.2.90 லட்சம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.