இந்தியா

ஷெரீப் வருகை: திக்விஜய் வரவேற்பு

செய்திப்பிரிவு

மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்பது குறித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து ஆதரவாகவும், எதிர்ப்புத் தெரிவித்தும் பல்வேறு கருத்துகள் வெளியாகியுள்ளன.

மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் ஏற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், “இதற்கு முன்பு (பாகிஸ்தானுக்கு எதிராக) மோடி பேசியதற்கும், இப்போது ஷெரீப்புக்கு அழைப்பு விடுத்ததற்கும் சம்பந்தமேயில்லை. மோடியின் இந்த முடிவை வரவேற்கிறேன்” என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறும்போது “மும்பை மீதான தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்க வேண்டும். இது தொடர்பாக இந்தியாவின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் பாகிஸ்தான் தரப்பிடமிருந்து எந்தவிதமான முன்னேற்றமும் காணப்படவில்லை. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு நடத்துவதற்கான சூழல் இல்லை என்றே காங்கிரஸ் கருதுகிறது.

அதே சமயம் ஷெரீபுக்கு அழைப்பு விடுப்பது பாஜகவின் விருப்பம். காங்கிரஸைப் பொறுத்தவரை இதை ஏற்றுக்கொள்ளவுமில்லை, நிராகரிக்கவுமில்லை” என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஷகீல் அகமது கூறுகையில், “தேசத்தின் நலனில் சமரசம் செய்துகொள்ளக்கூடாது” என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி கூறும்போது, “தீவிரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே சமயத்தில் நடைபெற முடியாது என்று முன்பு பாஜக கருத்துத் தெரிவித்து வந்தது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு முதல் வாஜ்பாய் வரை கடைப்பிடித்து வந்த கொள்கையை மோடி பின்பற்றத் தொடங்கியுள்ளார். இது ஆரோக்கியமான போக்கு என்றே கருதுகிறேன்.

அதே சமயம், இந்தியாவுக்கு வரும் ஷெரீபிடம் மும்பைத் தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளை தண்டிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விரைவில் பொறுப்பேற்கவுள்ள பாஜக அரசு கேள்வி எழுப்ப வேண்டும். பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத் இப்ராஹிமை, இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக பாஜக கூறி வந்தது. அதற்கான நடவடிக்கையை இப்போது எடுக்க வேண்டும்” என்றார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சதவ் கூறுகையில், “கார்கில் போரின்போது பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். இப்போது அவருக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது, அந்த போரில் உயிரிழந்த 527 வீரர்களின் தியாகத்தை அவமதிக்கும் செயலாகும். பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனை எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. இப்போது பாகிஸ் தான் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது தொடர்பாக அக்கட்சி என்ன பதில் கூறப்போகிறது?” என்றார்.

SCROLL FOR NEXT