இந்தியா

திருப்பதி என்கவுன்ட்டர் வழக்கு: 60 நாளில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

என்.மகேஷ் குமார்

திருப்பதி என்கவுன்ட்டர் வழக்கில் ஆந்திர அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவை நீதிமன்ற கண்காணிப்புக்குள் கொண்டுவந்துள்ள ஆந்திர உயர் நீதிமன்றம், 60 நாட்களுக்குள் வழக்கு குறித்த விசாரணையை முடிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு நேற்று உத்தரவிட்டது.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 7-ம் தேதி தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர அதிரடிப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இவ்வழக்கை விசாரிக்க போலீஸ் ஐஜி ரவிசங்கர் அய்யனார் தலைமையில் 8 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை ஆந்திர அரசு அமைத்துள்ளது. இக்குழுவில் கர்னூல் டிஐஜி ரமண குமார், எஸ்.பி. பாலராஜு, மேற்கு கோதாவரி மாவட்ட கூடுதல் எஸ்.பி. சந்திரசேகர், சிஐடி டிஎஸ்பி.க்கள் யுகந்தர் பாபு, ரகு, கோருகொண்டா இன்ஸ்பெக்டர் மதுசூதன், சித்தூர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே திருப்பதி என்கவுன்ட்டர் குறித்த விசாரணை ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸ் விசாரணை டைரியை ஆந்திர அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதனை படித்த நீதிபதிகள், கடும் அதிருப்தி அடைந்தனர். அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். இக்குழு குறித்து யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்தனர். மேலும் 60 நாட்களுக்குள் என்கவுன்ட்டர் குறித்த விசாரணையை முடிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT