இந்தியா

2014-ம் ஆண்டில் 5 லட்சம் பேர் புற்றுநோய்க்கு பலி: மத்திய அமைச்சர் நட்டா தகவல்

பிடிஐ

முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் புகையிலைப் பயன்பாடு காரணமாக 2014-ம் ஆண்டு நாட்டில் சுமார் 5 லட்சம் பேர் புற்றுநோய்க்கு பலியாகியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா மக்களவையில் இன்று தெரிவித்தார்.

இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் தரவின் படி, 2013-ம் ஆண்டு 4,78,180 ஆக இருந்த புற்று நோய் மரணங்கள் 2014-ம் ஆண்டில் 5 லட்சமாக அதிகரித்துள்ளது.

2014-ம் ஆண்டு 11,17,269 பேர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

புற்றுநோய் சிகிச்சையில் மீண்டு வருவது என்பது நோய்க்கணிப்பின் கட்டங்கள், சிகிச்சை ஆரம்பிக்கும் போது நோயின் நிலை, புற்றுநோய் தாக்கிய உடல் உறுப்பு மற்றும் அதன் வகை ஆகிய காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது என்று கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த நட்டா தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த நட்டா, “நாட்டில் நிகழும் மொத்த இறப்புகளில் தொற்று நோய் அல்லாத நோய்களினால் 42% இறப்பு ஏற்படுகிறது. தொற்று நோய், பேறுகால நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றினால் ஏற்பட்ட இறப்புகள் 38%, காயங்கள் மற்றும் விளக்கமுடியா காரணங்களினால் ஏற்பட்ட இறப்புகள் 10% என்றும் மத்திய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது” என்று கூறினார்.

SCROLL FOR NEXT