கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச். வகேலா, ஒடிஸா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வகேலா, 2013 மார்ச் 7-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கர்நாடக அரசுக்கு எதிராகவும், கன்னட அமைப்புகளுக்கு எதிராகவும் வகேலா வழங்கிய தீர்ப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
எனவே கன்னட அமைப்புகள் உள்ளிட்டவை நீதிபதி வகேலாவை இடமாற்றம் செய்ய வேண்டும் என துண்டறிக்கைகள் விநியோகித்தன. கர்நாடக வழக்கறிஞர்கள் கூட்டமைப் பினரும், வகேலாவை திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் புகார் அனுப்பினர்.
இந்நிலையில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணா கடந்த 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதையடுத்து நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவை பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமித்து, ஜெயலலிதாவின் வழக்கை விசாரிக்க ஆலோசனையும் வழங்கினார் வகேலா.
அதே காலக் கட்டத்தில் அரசு வழக்கறிஞராக ஆஜரான பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வகேலா, 'பவானிசிங் நியமனத்தில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கே.எல். மஞ்சுநாத் உரிய வரைமுறைகளை பின்பற்றவில்லை. கர்நாடக அரசை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இவரை நியமித்தது ஏன்?'' என கேள்வி எழுப்பினார். இதையடுத்து கர்நாடக அரசு பவானி சிங்கை அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து நீக்கியது. இருப்பினும் ஜெயலலிதா, உச்ச நீதிமன்றம் வரை சென்றதால் பவானிசிங் மீண்டும் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
இதே போல ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தனி அமர்வு அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே தலைமை நீதிபதி வகேலா விடுமுறை தினமாக ஜனவரி 1-ம் தேதி நீதிபதி சி.ஆர். குமாரசாமியை நியமித்து, வழக்கை மறுநாளே விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.
குடியரசு தலைவர் மாளிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஆணையில், ''கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா, ஒடிஸா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை நீதிபதி கே.எல்.மஞ்சுநாத் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படுவார்'' என கூறப்பட்டுள்ளது.
“நீதிபதி வகேலா வருகிற ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற இருக்கிறார். இந்நிலையில் அவரை திடீரென வேறு மாநில நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதன் காரணம் என்ன? உயர் நீதிமன்ற கோடை விடுமுறை நெருங்கும் நிலையில் இவ்வளவு அவசரமாக வகேலாவை ஒடிஸாவுக்கு மாற்றியது ஏன்” என கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.எம்.நானையா கேள்வி எழுப்பியுள்ளார்.
யார் இந்த வகேலா?
நீதிபதி வகேலா, குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். 1978-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். சமூகத்தில் பின் தங்கிய மக்களின் நலனுக்காக, பணம் வாங்காமல் வாதாடியுள்ளார். குஜராத்தில் போதிய உரிமையும், ஊதியமும் இல்லாமல் அவதிப்பட்ட தொழிலாளர்களின் நலனுக்காக வாதாடியுள்ளார்.
1999-ம் ஆண்டு நீதிபதி தேர்வில் வெற்றிப் பெற்று குஜராத் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்றார். குறுகிய காலத்தில் நீதி பரிபாலனம், தீர்ப்பு வழங்குவதில் தேர்ச்சி பெற்றார். 2001-ம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, அம்மாநில உள்துறை அமைச்சர் ஹரன் பண்டியா, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் அமித் ஜாதவா ஆகியோர் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பை வழங்கினார். 2013-ம் ஆண்டு திடீரென கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கர்நாடகத்திலும் மக்கள் நலனுக்கான பொதுநல மனுக்களை வேகமாக விசாரித்து திருப்புமுனை தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.