உத்தராகண்டில் புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் 6 மாத குளிர் கால இடைவெளிக்குப் பிறகு நேற்று காலை திறக்கப்பட்டது. இதன்மூலம் சார்தாம் எனப்படும் 4 புனிதத் தலங்களுக்கும் நேற்று முழு வீச்சில் யாத்திரை தொடங்கியது.
மாநில முதல்வர் ஹரீஷ் ராவத், சட்டப்பேரவை தலைவர் கோவிந்த் சிங் குஞ்வால் மற்றும் அரசு அதி காரிகள் முன்னிலையில், ஆயிரக் கணக்கான யாத்ரீகர்களின் கரகோஷங்களுக்கிடையே அதி காலை 5.15 மணிக்கு பத்ரிநாத் கோயிலின் கதவுகள் திறக்கப் பட்டன.
கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புனிதத்தலங்கள் அட்சய திருதியை நாளன்றும் (செவ்வாய்க் கிழமை) கேதார்நாத் கோயில் கடந்த வெள்ளிக்கிழமையும் திறக்கப்பட்டன.
இந்த நான்கு புனிதத் தலங்களும் கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருப்பதால் கடும் பனிப்பொழிவு காரணமாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் மூடப்பட்டு மீண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் திறக்கப்படுவது வழக்கம்.
கோயில்கள் திறந்திருக்கும் 6 மாத காலத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக் கான யாத்ரீகர்கள் இந்த புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற் கொள்வது வழக்கம்.
கடந்த 2013-ம் ஆண்டு வரலாறு காணாத அளவில் மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான யாத்ரீகர்கள் பலியாயினர். அதன் பிறகு சாலை கள் சீரமைக்கப்பட்டு மீண்டும் யாத்திரை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.