குஜராத் கடல் எல்லையில் 200 கிலோ போதைப் பொருட்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட பாகிஸ்தான் நாட்டு படகு தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு அந்நாடு கோரியுள்ளது.
இது குறித்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ஊடக பொறுப்பாளர் அலிமேமன் கூறும்போது, "இரண்டு பாகிஸ்தான் படகுகள், அதில் இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் தொடர்பான விவரங்களை பகிர்ந்து கொள்ளுமாறு இந்திய வெளியுறவுத்துறையை பாகிஸ்தான் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.
குஜராத் கடல் எல்லையில் செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகை இந்திய கடற்படையினரும் கடலோர காவல் படையினரும் தடுத்து நிறுத்தினர். அந்தப் படகை சோதனையிட்டபோது அதில் சுமார் 600 கோடி மதிப்பிலான 200 கிலோ போதைப் பொருட்கள் சிக்கின. படகில் இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மர்மப் படகு குறித்து கடலோர காவல் படைக்கு உளவுத் துறை தகவல் அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.