இந்தியா

நாட்டில் வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ஐஏஎன்எஸ்

‘‘நாட்டில் வேலை செய்யும் உரிமையை, அடிப்படை உரிமையாக்க வேண்டும். வேலை இல்லாதவர்களுக்கு உதவித் தொகையை அரசு வழங்க வேண்டும்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது தேசிய மாநாடு நடந்தது. இதில், வேலைவாய்ப்புகள் உட்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை வலியுறுத்தி நேற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:

நாட்டில் வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. கடந்த 30 ஆண்டு களாக நாட்டில் பொருளாதார சீர்திருத்தத்துக்கான நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், வேலைவாய்ப்பின்மை தான் அதிகரித்துள்ளது. லட்சக் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் வகையில் வேலை வாய்ப்பின்மை உள்ளது. மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்களின் பல துறைகளில் புதிய நியமனத்துக்கான தடையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், காலியாக உள்ள இடங்களை நீக்கிவிடும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும். அத்துடன் காலியாக உள்ள எல்லா இடங்களிலும் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் நியமனம் செய்ய வேண்டும்.

நாட்டில் வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும். வேலை இல்லாதவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள அவுட்சோர்சிங் முறையை நிறுத்த வேண்டும்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு முதலீடுகளை அதிகரிப்பதற்குப் பதில், தனியார் நிறுவனங்கள், உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளையே மோடி அரசு நம்பி உள்ளது. இதே கொள்கையைதான் முந்தைய காங்கிரஸ் அரசும் பின்பற்றியது. ஆனால், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவே இல்லை. நிலைமை இன்னும் மோசமானது.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு தீர்மானத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மோடி அரசு நீர்த்துப் போக செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT