ஆந்திர மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் நேற்று காலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்து சாலைகளில் குவிந்தனர். நேபாளத்தில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மக்கள் உணர்ந்தனர்.
இதில் ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம், விஜயவாடா, காக்கிநாடா, அமலாபுரம், ராஜமுந்திரி, ராவுலபாளையம், ஸ்ரீகாகுளம், ஏலூரு ஆகிய நகரங்களில் காலை 11.40 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிலரது வீடுகளில் பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்துள்ளன. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்தனர்.
சில மணி நேரம் வரை அவர்கள் அச்சத்துடன் சாலைகளிலேயே குடும்பத்துடன் காத்திருந்தனர். நிலநடுக்கம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.நிலநடுக்கம் குறித்து மக்கள் பீதி அடையவேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.