இந்தியா

ஐஎன்எஸ் மும்பை போர்க்கப்பல் மூலம் ஏமனில் இருந்து 440 பேர் மீட்பு: கிளர்ச்சிப் படைகள் மீது தாக்குதல் தீவிரம்

ஐஏஎன்எஸ்

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். மும்பை போர்க்கப்பல் மூலம் ஏமனில் இருந்து 440 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டில் ஹவுத்தி கிளர்ச்சிப் படையினருக்கும் அதிபர் மன்சூர் ஹதி படையினருக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபருக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப் படைகள், கிளர்ச்சிப் படைகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.

இதனால் ஏமனில் பணியாற்றி வரும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் போர்முனையில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை கப்பல், விமானம் மூலம் 1350 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏமனின் ஏடன் நகரில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க ஐ.என்.எஸ். மும்பை போர்க்கப்பல் அந்த நகர துறை முகத்துக்கு சென்றது. ஆனால் அங்கு கடும் சண்டை நடைபெற்று வருவதால் துறைமுகத்துக்கு செல்ல முடியவில்லை. சுமார் 6 கி.மீட்டர் தொலைவுக்கு முன் பாகவே கப்பல் நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து 12 சிறிய ரக படகுகளில் இந்தியர்கள் ஐ.என்.எஸ். மும்பை கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தக் கப்பல் மூலம் 179 இந்தியர் கள் உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த 440 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: உலகம் ஒரே குடும்பம் என்பது ஐ.என்.எஸ். மும்பை கப்பல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் ஹங்கேரி, ஏமன், பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், எகிப்து, நேபாளம், கனடா, லெபனான், இலங்கை, மொராக்கா, சிரியா, இத்தாலி, ருமேனியா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீட்கப் பட்டுள்ளனர் என்று தெரிவித் துள்ளார்.

ஐ.என்.எஸ். கப்பல் ஏடனில் இருந்து அருகில் உள்ள ஜிபோத்தி நாட்டின் தலைநகர் ஜிபோத்தி சிட்டிக்கு நேற்று பத்திரமாக வந்து சேர்ந்தது.

அந்த நகரில் மத்திய வெளியுற வுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் முகாமிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வரு கிறார். மீட்கப்படும் இந்தியர்கள் ஜிபோத்தி நாட்டில் இருந்து விமானம், கப்பல் மூலம் தாயகம் திரும்பி வருகின்றனர். இப்போது ஜிபோத்திக்கு அழைத்து வரப்பட்டுள்ள 179 இந்தியர்களும் உடனடியாக தாய்நாட்டுக்கு திரும்ப உள்ளனர்.

SCROLL FOR NEXT