இந்தியா

பெங்களூருவில் தமிழ் சிறுமியை அடக்கம் செய்ய எதிர்ப்பு: தமிழகம் கொண்டுவரப்பட்டது உடல்

இரா.வினோத்

பெங்களூருவில் கடந்த சில தினங்களுக்கு முன் இறந்த தமிழ் சிறுமியின் இறுதி சடங்கை அங்கு நிறைவேற்ற கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் உடல் அவரது சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் கர்நாடக தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள‌ ஹென் னூரை சேர்ந்தவர் முருகேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இதே பகுதியில் வசித்து வருகிறார்.முருகேசனின் மகள் ஸ்வேதா (11) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கை நிறைவேற்றுவதற்காக அருகில் உள்ள சுடுகாட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

அப்போது அங்கு வந்த சிலர், “இது எங்களுடைய சுடுகாடு. எங்களைத் தவிர மற்றவர்க‌ளுக்கு இங்கு இறுதி சடங்கு நிகழ்த்த அனுமதி இல்லை'' என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து முருகேசனின் குடும்பத்தார் ஹென்னூர் போலீஸில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உள்ளூர் வாசிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வேறு சுடுகாட்டில் இறுதிச்சடங்கு நடத்த போலீஸார் ஏற்பாடு செய்தனர்.

தங்களது வீட்டில் இருந்து வெகு தொலைவில் உள்ள சுடுகாட்டில் இறுதிச்சடங்கு நடத்த முருகேசனின் குடும்பத்தினர் விரும்பவில்லை. இதையடுத்து ஸ்வேதாவின் உடல் சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஸ்வேதாவின் உறவினர் சிக்கதேவம்மா பேசும்போது, “பூர்விகம் கிருஷ்ணகிரி என்றாலும் பெங்களூரு தான் நாங்கள் பிறந்த ஊர். எங்கள் குடும்பத்தை சேர்ந்த பலர் இறந்தபோது இங்குள்ள சுடுகாட்டில்தான் இறுதிச்சடங்கு செய்துள்ளோம். எங்களுடன் உறவாக பழகிய உள்ளூர் மக்கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்தது அதிர்ச்சியாக இருக்கிறது'' என்றார்.

“இந்த பிரச்சினைக்கு மொழி பிரச்சினையோ, சாதி பிரச்சினையோ காரணம் இல்லை. காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களிடையே பிரச்சினை இருக்கும் நிலையில் இது பற்றி ஊடகங்கள் எழுத வேண்டாம்.இறந்த உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை'' என காவல் துறையினர் தெரிவித்தனர்.

கர்நாடகத்தில் காலங்காலமாக வாழும் தமிழர்கள் இறக்கும் போது சுடுகாடு மறுக்கப்படுவது வேதனையானது. இந்த மாதிரியான சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதனை கர்நாடக அரசு உடனடியாக தடுக்க வேண்டும் என தமிழ் அமைப்பினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT