மிசோரம் மாநில ஆளுநர் அஜீஸ் குரேஷி நேற்று பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த அவர், பதவியில் இருந்து தன்னை அகற்றும் முயற்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆவார்.
குடியரசுத் தலைவர் மாளிகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிசோரம் ஆளுநர் பொறுப்பில் இருந்து அஜீஸ் குரேஷி நீக்கப்பட்டுள்ளார். புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை, மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, கூடுதல் பணியாக மிசோரம் ஆளுநர் பொறுப்பை ஏற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
குரேஷியின் பதவிக்காலம் 2017, மே மாதம் வரை உள்ளது. மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்ற சில மாதங்களில் குஜராத் ஆளுநராக இருந்த கமலா பெனிவால் மிசோரம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டு பின்னர் பதவி நீக்கப்பட்டார். இந்த வகையில் மிசோரத்துக்கு மாற்றப்பட்டு, பதவி நீக்கப்பட்ட 2-வது ஆளுநர் குரேஷி ஆவார்.
மகாராஷ்டிர ஆளுநராக இருந்து சங்கர நாராயணனும் மிசோரத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால் இதை ஏற்க மறுத்த அவர் பதவி விலகிவிட்டார்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் ஒருவரான அஜீஸ் குரேஷி காங்கிரஸ் மூத்த தலைவர் ஆவார். இதற்கு முன் இவர் உத்தராகண்ட் மாநில ஆளுநராக இருந்தபோது, இவரை பதவி விலகுமாறு அப்போதையை உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி கேட்டுக்கொண்டார். இதை எதிர்த்து குரேஷி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
9 மாதங்களில் 6 ஆளுநர்கள்
சிறிய வடகிழக்கு மாநிலமான மிசோரம், கடந்த 9 மாதங்களில் 6 ஆளுநர் மாற்றத்தை சந்தித்துள்ளது. மேலும் பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, ஆளுநர்களை பதவி நீக்கும் இடமாக மிசோரம் மாறியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், மிசோரம் ஆளுநராக இருந்த வி.புருஷோத்தம் அண்டை மாநிலமான நாகாலாந்துக்கு மாற்றப்பட்டார். ஆனால் இதுகுறித்து தன்னிடம் ஆலோசிக்கவில்லை என்று அவர் பதவி விலகினார்.
இதையடுத்து குஜராத் ஆளுநராக இருந்த கமலா பெனிவால் இங்கு மாற்றப்பட்டு, 1 மாதத்தில் பதவி நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர ஆளுநர் கே.சங்கர நாராயணன் இங்கு மாற்றப்பட்டு, அவர் பதவியேற்கவில்லை.
மணிப்பூர் ஆளுநராக இருந்த முன்னாள் உள்துறை செயலாளர் வி.கே.துகலுக்கு கூடுதல் பொறுப்பாக மிசோரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் 20 நாட்களில் அவர் பதவி விலகிவிட்டார்.
இதைத் தொடர்ந்து மேகாலயா ஆளுநராக இருந்த கே.கே.பாலுக்கு கூடுதல் பொறுப்பாக மிசோரம் வழங்கப்பட்டு, பின்னர், அவர் உத்தராகண்ட் மாற்றப்பட்டார். இதையடுத்து உத்தராகண்ட் ஆளுநராக இருந்த குரேஷி மிசோரத்தில் நியமிக்கப்பட்டார்.