ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் செயல்பட்டு வந்த முதல்வர் அலுவலகத்திற்கு வாஸ்து சரியில்லை என்பதால், தெலங்கானா, ஆந்திர முதல்வர்கள் தங்கள் அலுவலகத்தை வேறிடத்தில் அமைக்க முடிவு செய்துள்ளனர்.
ஹைதராபாத் பேகம்பேட்டை பகுதியில் ஆந்திர முதல்வர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தில் பணியாற்றிய முதல்வர் ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டி, எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து முதல்வரான ரோசைய்யாவும் முதல்வராக தொடர்ந்து நீடிக்கவில்லை. தொடர்ந்து, கிரண்குமார் ரெட்டி முதல்வரானார். இவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் தலை தூக்கின.
இறுதியில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சொந்தக் கட்சி தொடங்கி தேர்தலைச் சந்தித்தும் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியவில்லை. பேகம்பேட்டை முதல்வர் அலுவலகத்தின் வாஸ்து சரியில்லாததுதான் இதற்குக் காரணம் என நம்பப்படுகிறது.
தற்போது, வரும் ஜூன் 2-ம் தேதிக்கு பிறகு, இந்த அலுவலகத்தில் இருந்து ஆட்சி நடத்த தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் கே. சந்திர சேகர் ராவிற்கு முதலில் அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். ஜோதிடம், வாஸ்து போன்றவற்றில் அதிக நம்பிக்கை உள்ள சந்திர சேகர் ராவ், ஜோதிடர்களை முதலில் அந்த அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
இந்த அலுவலகம் வேண்டாம் என ஜோதிடர்கள் கூறியதால், தற்போது குந்தன் பாக் பகுதியில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகளின் குடியிருப்பில் உள்ள இரண்டு பங்களாக்களை தனது முதல்வர் அலுவலகமாக மாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்தார். இதனை மாநில ஆளுநரும் ஒப்புக்கொண்டார். வரும் ஜூன் 2-ம் தேதி முதல் தெலங்கானா மாநில முதல்வரின் அலுவலகம் குந்தன் பாக் பகுதியில் செயல்பட உள்ளது.
சந்திரபாபுவும் புறக்கணிப்பு
இதே போன்று ஆந்திராவின் (சீமாந்திரா) முதல்வராக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடுவும் பேகம்பேட்டை அலுவலகத்தை புறக்கணித்துள்ளார். அரசு ஒதுக்கிய தலைமை செயலத்தில் உள்ள ஹெச் பிளாக் கட்டிடத்தையும் இவர் ஒதுக்கி வைத்து விட்டு, ஹைதராபாத்தில் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்திலேயே முதல்வர் அலுவலகம் செயல்படும் என அதிகாரிகளுக்கு தெரிவித்து உள்ளார்.
விஜயவாடா-குண்டூர் இடையே உள்ள ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக் கழகத்தில், சீமாந்திரா தலைநகரம் அறிவிக்கப்படும் வரை தற்காலிக முதல்வர் அலுவலகம் அமைக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த அலுவலகத்தில், வாரத்திற்கு 3 நாட்கள் தங்கி பணியாற்ற சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.