காந்தி ஜெயந்தி விடுமுறையை மாற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று மாநிலங்களவையில் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நாக்வி விளக்கமளித்தார்.
விடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து காந்தி ஜெயந்தியை நீக்கியதன் மூலம் பாஜக தலைமையிலான கோவா மாநில அரசு சர்ச்சையில் சிக்கியது. இதற்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதுகுறித்து கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகர் கூறும்போது, “இந்த ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் பட்டியலில் காந்தி ஜெயந்தி தவறுதலாக விடுபட்டுள்ளது. இதற்கு டைப்பிங் செய்யும்போது ஏற்பட்ட தவறே காரணம். வேண்டும் என்றே செய்த தவறு அல்ல” என்றார்.
ஆனாலும் எதிர்க்கட்சிகள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வந்தன.
இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் சாந்தாராம் நாயக் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தா அப்பாஸ் நாக்வி, "காந்தி ஜெயந்தி விடுமுறையை மாற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. கோவா மாநில அரசின் காலண்டரில் அச்சுப் பிழை காரணமாகவே காந்தி ஜெயந்தி விடுமுறைப் பட்டியலில் இருந்து விடுபட்டிருந்தது. அது சரி செய்யப்பட்டுவிட்டது" என்றார்.
இருப்பினும் பதிலளிக்கும்போது நாக்வி கூறிய ஒரு வாக்கியம் அவையில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. "காந்தி ஜெயந்தி என்பது தேசிய விடுமுறை நாள், இதை மாநில அரசு தனது காலண்டரில் பதிவு செய்யாவிட்டாலும்கூட பிரச்சினை இல்லை" என்றார்.
நாக்வியின் இந்த விளக்கத்துக்கு அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.