சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்தல் திருத்த மசோதா வரும் 9-ம் தேதி திங்கள்கிழமை அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் வெங்கய்ய நாயுடு பேசினார்.
''நிலம் கையகப்படுத்துதல் திருத்த மசோதா குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித்தலைவர்களுடன் பேசி வருகிறோம்.
எதிர்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான, அர்த்தமுள்ள ஆலோசனைகளை ஏற்று அவற்றை திருத்த மசோதாவில் சேர்க்க அரசு தயாராக உள்ளதாக மாநிலங்களவையிலும், மக்களவையிலும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் இந்த மாற்றங்களை செய்ய வேண்டியதன் அவசியத்தை மற்ற கட்சிகளும் புரிந்துகொள்ளும் என நம்புகிறேன்''என வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.