அசாமில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், இவற்றை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டுவர அம்மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.
அசாமில் கடந்த 2005 முதல் 2014 வரை மாநிலம் முழுவதிலுமான காவல் நிலையங்களில் பெண் களுக்கு எதிராக 68,329 குற்றங்கள் பதிவாகி உள்ளன. இதில் பாலியல் பலாத்காரம், சூனியக்காரி என குற்றம் சாட்டுதல், வரதட்சணை கொடுமை ஆகியவற்றில் சிக்கி 1,589 பெண்கள் பலியாகி உள்ள னர். இவர்களில் பாலியல் கொடுமை யில் 78 பேர், வரதட்சணை கொடுமை யில் 1,388 பேர் சூனியக்காரிகள் என்ற குற்றச்சாட்டில் 123 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 68,329 குற்றங்களில் மேலும் 15,931 பெண் கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளனர்.
2014-ம் ஆண்டு மட்டும் 2,060 பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகி அதில், 13 பேர் உயிர் இழந்துள்ளனர். வரதட்சணை கொடுமையால் 205 பெண்களும், சூனியக்காரி எனப் பழி சுமத்தப் பட்டு 6 பெண்களும் கொல்லப்பட் டுள்ளனர். இத்துடன் 11,657 பெண் கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி இருப்பதாக அசாம் மாநில அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்த 9 ஆண்டு குற்றங்களுக் காக இதுவரை 47,298 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 44,887 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களில் 47,298 பேர் மீது பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்ற வழக்குகளில் இதுவரை 1,385 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அசாம் விவசாயத் துறை அமைச்சர் ராக்கிபுல் உசைன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்த குற்றங்கள் அதிகரிப்பு மிகவும் கவலைக்குரியதாகும். இவற்றில் குறிப்பாக 26,464 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர். இந்தக் கடத்தல் குற்றங்களுக்காக அசாம் மாநில போலீஸார் 13,568 பேரை கைது செய்து வழக்குகள் பதிவு செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து அவர்களை பாதுகாக்கும் பொருட்டு புதிய சட்டம் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றார்.
பெண்களுக்கு எதிரான குற்றங் கள் அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டி சட்டப்பேரவையில் சில நாட்களுக்கு முன் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பின. அதை தொடர்ந்து, முதல்வர் தருண் கோகாய் தலைமையிலான காங்கிரஸ் அரசு புதிய சட்டம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியதாக தெரிகிறது.