நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர் என்ற முறையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது மட்டுமே அவரைக் குற்றவாளியாக்கி விடாது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சஞ்சய் ஜா ட்விட்டரில் தொடர்ச்சியாக பதிவிட்டதாவது: "கோர்ட் சம்மன் அளிக்கப்பட்டதனாலேயே ஒருவர் குற்றவாளியாகிவிட மாட்டார். சம்மன் அனுப்புவது என்பது சட்டத்தின் அரிச்சுவடி.
மன்மோகன் சிங்தான் நிலக்கரிச் சுரங்கங்களுக்கு ஏல முறையைக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டார். அவர் வெளிப்படைத்தன்மையைக் கோரியவர், ஆனால் பாஜக ஆளும் மாநிலங்கள் இதனை எதிர்த்தன.
உண்மை என்னவெனில், சந்தேகத்துக்கிடமான நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில்தான் நடந்துள்ளது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா, மேற்கு வங்கம் இன்ன பிற... மாநிலங்கள்.
என்று பதிவிட்டுள்ளார் சஞ்சய் ஜா.