திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான நேற்று காலை உற்சவரான ராமர், சிம்ம வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற கோதண்டராம சுவாமி கோயிலில் தற்போது நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 3-ம் நாளான நேற்று காலை உற்சவர் ஸ்ரீராமர், சிம்ம வாகனத்தில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக உற்சவ மூர்த்திகளான ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு கோயில் வளாகத்தில் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கோதண்ட ராமர் அலங்காரத்தில் உற்சவர் வெள்ளி சிம்ம வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரவு முத்து பல்லக்கு வாகனத்தில் உற்சவர்கள் பவனி வந்து அருள் பாலித்தனர். இதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.