பயங்கரவாத வழக்குகளை விரை வாக முடிக்கவேண்டும் என்று தமிழகம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதன் மூலம் எதிர்காலத்தில் அதுபோன்ற தாக்குதல்கள் தடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு ராஜ்நாத் சிங் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில், “பயங்கரவாத சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படுவதன் மூலம் இந்த வழக்குகள் விரைவாக முடிக்கப்படுவது அவசியம்.
அதே நபர் அல்லது அதே அமைப்பினால் எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படாமல் தடுப்பதற்கு இதுவே மிகச்சிறந்த வழி. எனவே இந்த வழக்குகளில் தாங்கள் தனிப்பட்டமுறையில் கவனம் செலுத்தி விசாரணை அமைப்புகள் அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு முன்னேறுவதை உறுதிப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மத்தியப்பிரதேச முதல்வருக்கு ராஜ்நாத் எழுதியுள்ள கடிதத்தில், “இம்மாநிலத்தின் கந்துவா சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த `சிமி’ அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி தப்பிச் சென்றனர். ஓராண்டுக்கு மேலாகியும் இவர்கள் கைது செய்யப்படவில்லை.
சிறையில் இருந்து தப்பிய சிமி தீவிரவாதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பு மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.
நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ள இந்தக் குழுவினர், அதிகாரிகளால் கைது செய்யப்படுவதை சாதுரியமாக தவிர்த்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராஜ்நாத் எழுதியுள்ள கடிதத்தில், “சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு மே 1-ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை தமிழக சிபி-சிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளார்.
இதுபோல் சித்தராமையாவுக்கு ராஜ்நாத் எழுதியுள்ள கடிதத்தில், “பெங்களூருவில் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். கர்நாடக காவல்துறை விசாரித்து வரும் இவ்வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளார்.
இவ்வழக்குகளில் மாநில அரசு களுக்கு உதவிட மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் ராஜ்நாத் குறிப்பிட்டுள்ளார்.