இந்தியா

மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டம்: கேரள ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

பிடிஐ

பசு வதை மற்றும் மாட்டிறைச்சிக்கு நாடு முழுவதும் தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதற்கு கேரளாவில் ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் எதிர்க்கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பல்வேறு பிரச்சினைகளில் மோதிக் கொள்ளும் இந்த இரு முன்னணிகளும் மாட்டிறைச்சி, பசு வதைக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் மிக அபூர்வமாக ஒன்றாக இணைந்துள்ளன. நாட்டிலேயே அதிக அளவு மாட்டிறைச்சி உட்கொள்ளும் மாநிலமாக கேரளம் திகழ்கிறது. இந்நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அடிப்படையில் மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த நடவடிக்கை சரியானது என கேரள பாஜக தலைவர்கள் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் ஜனநாயக சுதந்திரத்திலும் தனிநபர் சுதந்திரத்திலும் தலையிடுவதற்கான அடையாளம்தான் பசு வதை, மாட்டிறைச்சிக்கு தடை கொண்டு வரும் திட்டம் என மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆட்சேபித்துள்ளனர்.

பசு வதைக்கு தடை விதிக்க மத்திய அரசு எடுக்கும் முயற்சியை கேரளம் அமல்படுத்தாது என்பதை மாநில சட்டப்பேரவையில் முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலரும் எம்எல்ஏவுமான பி.சி.விஷ்ணு நாத்.

சங் பரிவார் அமைப்புகளின் அரசியல் பிரச்சாரம் காரணமாகவே இந்த நடவடிக்கை. பாசிச செயல் திட்டத்தை மாநில மக்கள் மீது திணிக்கும் பாஜகவின் திட்டத்தை கேரளம் முற்றிலுமாக நிராகரிக்கிறது என்றும் விஷ்ணு நாத் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் அணியான இந்திய ஜனநாயக இளைஞர் சங்கங்கள் கூட்டமைப்பின் அகில இந்திய தலைவர் எம்.பி.ராஜேஷ் கூறும்போது, “நாட்டு மக்களின் உணவுப் பழக்கங்கள் விஷயத்திலும் மதப் பார்வையுடன் நோக்குகிறது பாஜக அரசு. மற்றவற்றைவிட மலிவான விலையில் கிடைக்கும் உணவு மாட்டிறைச்சி. இதைத் தடை செய்வதால் மக்களுக்குத்தான் திண்டாட்டம்.

பாசிச சக்திகளின் அரசியல் உள் நோக்கம் இந்த நடவடிக்கை. இதைத் தடுத்து நிறுத்திட ஜனநாயக அமைப்புகள் ஒன்று திரண்டு போராட முன்வர வேண்டும்” என்றார்.

ஆனால் மத்திய அரசின் முயற்சி நல்ல நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் பால், சாணம் தரும் பசுக்களைக் காப்பாற்றி பசுமை வளர்ச்சியை அதிகப்படுத்துவதுதான் இதன் அடிப்படை நோக்கம் என்றும் கூறுகிறார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சோபா சுரேந்திரன்.

SCROLL FOR NEXT