இந்தியா

திஹார் சிறைக்குள் எறியப்படும் செல்போன்கள்: அதிகாரிகள் திணறல்

கிருத்திகா சர்மா செபாஸ்டின்

டெல்லி திஹார் சிறைக்குள் மொபைல் போன்கள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை சுற்றுச்சுவருக்கு வெளியில் இருந்து எறியும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. இது சிறை அதிகாரிகளுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

“கடந்த ஆண்டு வரை இது போல பொருட்களை எறியும் சம்பவங்கள் வாரத்துக்கு 2 அல்லது 3 முறை நடந்தன. ஆனால் கடந்த 2 – 3 மாதங்களாக இந்த சம்பவம் அன்றாட நிகழ்வாகிவிட்டது” என்கின்றனர் சிறை அதிகாரிகள்.

சிறை அதிகாரிகள் கண்டிப்புடன் இருப்பதாலும் கைதிகள் தங்கள் உடலில் மறைத்து வைத்திருக்கும் மொபைல் போன்களை அவர்கள் அடிக்கடி பறிமுதல் செய்வதாலும் எறிதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மொபைல் போன்கள் மட்டுமன்றி புகையிலை, சிகரெட், போதைப்பொருள் போன்றவையும் எறியப்படுகின்றன. மொபைல் போன்களை பிளாஸ்டிக் தாளில் சுற்றி சிறையில் இருக்கும் தங்கள் நண்பர் மற்றும் உறவினர்கள் பயன்படுத்துவதற்காக எறிகின்றனர். தினமும் 1 அல்லது 2 போன்கள் பறிமுதல் செய்யப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேற்கு டெல்லியில் உள்ள திலக் நகரில், குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் திஹார் சிறை அமைந்துள்ளது. சிறை வளாகத்துக்கு எதிரில், ஜெயில் ரோட்டில் மேம்பாலம் உள்ளது. ஒரு பொருளை சிறை வளாகத்துக்குள் எறிவதற்கு வாய்ப்பாக இது அமைந்துள்ளது. இந்தப் பாலத்தில் இருந்து ஒரு பொருளை சிறை வளாகத்தில் எறிந்தால் அது சிறை எண் 8, 9, 1 ஆகியவற்றில் விழும் வாய்ப்புள்ளது. இதுபோல ஜஹாங்கிர்புரியில் இருந்து சிறை வளாகத்தினுள் ஒரு பொருளை எறிந்தால் அது சிறை எண் 4-ல் விழும். திலக் நகரில் 2-ம் எண் நுழைவாயில் அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து ஒரு பொருளை எறிந்தால் அது சிறை எண் 2 அல்லது 1-ல் விழும்.

“எனினும் சிறை எண் 8,9,1 ஆகியவற்றில்தான் எறிதல் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன, இதற்கு இந்த சிறைகளின் அமைவிடமே காரணம்” என்கின்றனர் அதிகாரிகள்.

சிறை வளாகத்தையொட்டி தொடக்கப் பள்ளி ஒன்றும் அமைந்துள்ளது. “இங்கிருந்துதான் அதிக அளவில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எறியப்படுவதாக கருதுகிறோம்” என்கிறார் சிறை அதிகாரி ஒருவர்.

சிறை அதிகாரிகள் கூறும்போது, “எறிதல் சம்பவங்களை தடுக்க கூடுதல் காவலர்களை பணியில் அமர்த்தியுள்ளோம். இதற்கு முன்பு சிறை இயக்குநர்களாக இருந்தவர்கள் டெல்லி மாநில அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் உதவி கோரியும் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயன்றனர்” என்றனர்.

SCROLL FOR NEXT