பிஹாரில் தேர்வு மோசடி தொடர் பாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போலீஸாரால் பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாக காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறினார்.
பிஹாரில் கடந்த 17-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. இந்நிலையில் மனார் என்ற கிராமத்தில் 4 மாடி தேர்வு மையத்தின் சுவர் மீது மாணவர்களின் பெற்றோரும், நண்பர்களும் ஏறி அவர்களுக்கு விடை எழுதிய சீட்டுகளை கொடுத்துள்ளனர்.
இதனை பள்ளி நிர்வாகமோ, காவலுக்கு நின்ற போலீஸாரோ தடுக்கவில்லை. இதுதொடர் பான காட்சிகள் உள்ளூர் சேனல்களிலும், சமூக வலைத் தளங்களிலும் வெளியானது. இதனால் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில் பிஹார் கூடுதல் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே நேற்று கூறும்போது, “தேர்வு மோசடி தொடர்பாக மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போலீஸாரால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 50 சதவீதம் பேர் பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஆவர். மற்றவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆவர்.
அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதற்கு பதிலாக குற்றத்துக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்துமாறு கூறப்பட்டது. இதையடுத்து 50 சதவீதம் பேர் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களை குற்றவாளிகளாக நடத்த நாங்கள் விரும்பவில்லை. இவர்கள் தங்கள் தவறை உணரச் செய்யவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எனவே விடுதலை செய்தோம். தேர்வு மோசடி தொடர் பாக 2 போலீஸார் கைது செய் யப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
ஹிந்தி தேர்வு ரத்து
இதனிடையே பிஹாரில் இன்று நடைபெறவிருந்த ஹிந்தி முதல் தாள் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
பூர்னியா மாவட்டத்தில் உள்ள தேர்வுமையம் ஒன்றில், இந்தப் பாடத்தின் வினாத்தாள் நேற்று முன்தினம் மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டது.