இந்தியா

தேசிய மகளிர் ஆணையக் குழு: கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளியில் ஆய்வு

பிடிஐ

மேற்கு வங்க மாநிலத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட கான்வென்ட் பள்ளியில் தேசிய மகளிர் ஆணையக் குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது.

மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டம், கங்னாபூரில் உள்ள கான்வென்ட்டில், கடந்த 14-ம் தேதி கொள்ளை கும்பல் ஒன்று 72 வயது கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்தது. கான்வென்ட்டில் இருந்து ரூ.12 லட்சத்தையும் அந்தக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் ஷமினா ஷபீக் தலைமையில் 3 பேர் கொண்ட குழு நேற்று இந்தப் பள்ளிக்குச் சென்று, அங்குள்ள அதிகாரிகளிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசியது.

மாநில அரசு மீது தாக்குதல்

பின்னர் ஷமினா ஷபீக் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆன நிலையிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படாதது கவலை அளிக்கிறது. சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமாரா பதிவுகள் உள்ளன. எனவே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இதுகுறித்து காவல் துறையிடம் நாங்கள் பேசுவோம்” என்றார்.

“இந்த நிலைமைக்கு மாநில நிர்வாகத்தின் தவறுதான் காரணம் என்று கருதுகிறீர்களா?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நிச்சயமாக, இது மாநில அரசின் தவறுதான்” என்றார் ஷமினா ஷபீக்.

கடந்த மார்ச் 14-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மாநில காவல்துறை 17 பேரை பிடித்து விசாரித்து வருகிறது. எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மாநில அரசு தொடக்கத்தில் சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் குற்றவாளிகள் வங்கதேசத்துக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. என்றாலும் விசாரிக்கும் பொறுப்பை சிபிஐ இதுவரை ஏற்கவில்லை.

இதனிடையே பலாத்கார சம்பவத்துக்குப் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கன்னியாஸ்திரி நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் சென்ற இடம் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT