இந்தியா

துண்டு துண்டாக்குவேன்: மோடிக்கு எதிராக காங். வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை- பாஜக கண்டனம்; தேர்தல் ஆணையம் வழக்கு

செய்திப்பிரிவு

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை துண்டு துண்டாக்குவேன் என்று உத்தரப் பிரதேச மாநிலம், சஹரான்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் பேசியிருப்பது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மசூத் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிந்துள்ளது.

சஹரான்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடிக்கு எதிராக மசூத் இவ்வாறு பேசும் வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து மசூத் மீது சஹரான்பூர் மாவட்டம், தேவ்பாத் காவல் நிலைத்தில் வழக்குப் பதிவு செய் யப்பட்டது.

“உத்தரப் பிரதேசத்தை குஜராத் போல் மோடி மாற்ற முயன்றால் நாங்கள் அவரை துண்டு துண்டாக்குவோம். இதற்காக நான் தாக்கப்படுவேன் என்றோ கொல்லப்படுவேன் என்றோ பயப்பட மாட்டேன். மோடிக்கு எதிராக நான் போரிடுவேன். உ.பி.யை அவர் குஜராத் என நினைக்கிறார். குஜராத்தில் 4 சதவீதம் பேரே முஸ்லிம்கள். ஆனால் உ.பி.யில் 42 சதவீதம் பேர் முஸ்லிம்கள்” என்று இம் ரான் மசூத் பேசியிருந்தார்.

பேச்சுக்கு வருத்தம்

என்றாலும் மசூத் தனது பேச்சுக்கு பின்னர் வருத்தம் தெரிவித்தார். “நான் மிகுந்த எச்சரிக்கையுடன் வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க வேண்டும். தேர்தல் பிரச்சார அனலில் அவ்வாறு பேசிவிட்டேன்” என்று மசூத் கூறியிருந்தார்.

4 பிரிவுகளில் வழக்கு

சஹரான்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தியா திவாரி கூறுகையில், “மசூத் பேச்சு விவரம் கொண்ட சி.டி. எங்களுக்கு கிடைத்துள்ளது. நாங்கள் அதை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளோம்.

மசூத் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153ஏ (இரு பிரிவினர் இடையே விரோதப் போக்கை வளர்ப்பது), 295ஏ (மத உணர்வுகளை தூண்டுவது), 504 (அமைதிக்கு கேடு விளைவிப்பது), 506 (குற்ற அச்சுறுத்தல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பாஜக கண்டனம்

இதனிடையே இம்ரான் மசூத் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணை யரை சனிக்கிழமை சந்திக்கப் போவதாக பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

“காங்கிரஸ் ஏற்கவில்லை”

இதனிடையே இம்ரான் மசூத் பேசியதை காங்கிரஸ் ஏற்க வில்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலா கூறியுள்ளார். “வன் முறையை காங்கிரஸ் கட்சி ஏற் காது. பாஜகவையும், அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும் அரசியல் ரீதியாக எதிர்கொள்வதில் நாங்கள் உறுதி யாக உள்ளோம்.

நாங்கள் விளக்கம் கேட்ட போது, தவறுதலாக கூறிவிட்டதாக மசூத் எங்களிடம் கூறினார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்குமாறு அவரிடம் கூறியுள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT