இந்தியா

ராகுல் காந்தியை உளவு பார்க்கிறது மோடி அரசு: காங்கிரஸ் கடும் கண்டனம்

பிடிஐ

“ராகுல் காந்தி அலுவலகத்துக்கு சென்று போலீஸார் தேவை யில்லாத கேள்விகளைக் கேட்டு விசாரித்துள்ளது கடும் கண்டனத் துக்கு உரியது. பிரதமர் நரேந்திர மோடி அரசு அரசியல் உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது” என்று காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விடுமுறையில் உள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பே அவர் விடுமுறையில் சென்று விட்டார். அவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை காங்கிரஸ் வெளியிடவில்லை. இந்நிலையில் கடந்த 12-ம் தேதி, டெல்லியில் உள்ள ராகுல் காந்தி அலுவலகத்துக்கு போலீஸார் சென்று விசாரித்து வந்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிங்வி கூறியதாவது:

ராகுல் காந்தியை அரசியல் உளவு பார்க்கிறது நரேந்திர மோடி அரசு. ராகுலின் அலுவல கத்துக்கு போலீஸார் அத்துமீறி சென்று தேவை இல்லாத விவரங்களைக் கேட்டுள்ளனர். ராகுல் காந்தி கண்களின் நிறம் என்ன, அவர் எப்படி இருப்பார், அவர் என்ன மாதிரியான ஷூ அணிவார் என்றெல்லாம் விசாரித்துள்ளனர். மோடியை யும் பாஜக.வையும் எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை உளவு பார்ப்பது குஜராத்தில் வழக்கம். குஜராத்தில்தான் எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகை யாளர்கள், முக்கிய நபர்கள் கண்காணிக்கப்பட்டனர்.

அதே பாணியை இப்போது தேசிய அரசியல் கட்சித் தலைவர் களிடமும் மோடி அரசு பின்பற்றுகிறது. இந்தப் பிரச்சினையை நாடாளு மன்றத்தில் கிளப்புவோம். ராகுல் பற்றி போலீஸார் விசாரித்து சென்றது குறித்து பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளிக்க வேண்டும்.

போலீஸார் என்னென்ன பேசினர் என்பது குறித்த முழு உண்மைகளை இப்போ தைக்குத் தெரிவிக்க முடியாது. பல விவரங்களை வெளிப் படுத்தாமல் இருக்கிறோம். அரசியல் தலைவர்களை மோடி அரசு உளவு பார்க்கிறது என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில், நேரம் வரும் போது அந்த உண்மைகளை வெளிப்படுத்துவோம். டெல்லி யில் பலாத்கார குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. இதற்கு தீர்வு காண்பதற்கு பதில், உளவு பார்க்கும் வேலைகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.

இதனிடையே, ராகுல் காந்தி வீட்டுக்கு போலீஸார் உளவு பார்க்கச் சென்று வந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை, டெல்லி போலீஸ் ஆணையர் பி.எஸ்.பாஸி திட்டவட்டமாக மறுத்துள்ளார். | செய்திக்கு>உளவு பார்க்கச் செல்லவில்லை: ராகுல் காந்தி வீட்டுக்கு செல்வது வழக்கமான வேலைதான் - டெல்லி போலீஸ் ஆணையர் விளக்கம்

காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி

பாஜக செய்தித் தொடர்பாளர் சுதாங்சு திரிவேதி டெல்லியில் நேற்று கூறியது: ராகுல் குறித்து காவல் துறை சேகரித்த விவரங்கள் வழக்கமான நடை முறை. பிரதமர், உள்துறை அமைச்சர், பாஜக மூத்த தலைவர் அத்வானி, மூத்த எதிர்க்கட்சித் தலைவர் வீரப்ப மொய்லி, நரேஷ் அகர்வால் உள்ளிட்டோரிடமும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதனை காங்கிரஸ் கட்சி அரசியலாக்கி உள்ளது.

தங்கள் கட்சி சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பாற் பட்டது என்ற எண்ணத்தில் அவர்கள் இருப்பதையே இது காட்டுகிறது.

முன்பு காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த போது குஜராத்தின் நடவடிக் கைகளை கண்காணிக்க உள்துறை அமைச்சகத்தில் ஓர் அதிகாரியை நியமித்தார்கள். இதுதான் காங்கிரஸ் கட்சியின் அரசியல் உத்தி என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT