ஏமனில் பணிபுரிந்து வரும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக கொச்சி துறைமுகத்திலிருந்து 2 பயணிகள் கப்பல் புறப்பட்டன.
இது குறித்து கொச்சி துறைமுக துணைச் செயலாளர் ஜிஜோ தாமஸ் கூறும்போது, "ஜிபவுத்தி துறைமுகத்தை நோக்கி கொச்சியிலிருந்து 2 கப்பல்கள் புறப்பட்டன.
எம்.வி. கவராத்தி, எம்.வி. கோரல்ஸ் என்ற 2 கப்பல்களில் மொத்தம் 1,500 பேரை அழைத்து வர முடியும். கொச்சியிலிருந்து புறப்பட்ட இந்த கப்பல்கள் ஜிபவுத்தி துறைமுகம் சென்றடைய 5 முதல் 7 நாட்கள் வரை ஆகும்.
இதில் பல்வேறு இடங்களிலிருந்து கடற்படை மருத்துவ அதிகாரிகள் 150 பேர் இணைவார்கள். கப்பலில் போதுமான உணவு, மருந்து பொருட்கள், தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் அனைவரும் சர்வதேச கடலில் பயணிக்க குடியேற்ற நிபந்தனை முறைகளை முடிக்க வேண்டி இருக்கும். இதற்காக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.
ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபிய கூட்டணி நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர்ச் சூழலில் பாதிப்பு மிக்க பகுதிகளில் சிக்கியிக்கும் இந்தியர்களை கடல்வழியாக மீட்டு வருவதற்கான ஏற்பாடுகள் பலக்கட்டமாக நடந்து வந்தது. அங்கு பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் 3,500 இந்தியர்களில் பெரும்பாலானோர் கேரளத்தவர்கள்.
வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்க கேரள முதல்வர் உம்மன் சாண்டி உள்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கை
இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கூறிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், "ஞாயிறு காலையே ஒரு கட்டமாக அழைத்து வரப்பட்ட கேரளாவைச் சேர்ந்த செவிலியர்கள் கொச்சி துறைமுகத்துக்கு வந்தடைந்தனர்.
ஏமனில் 3,500 இந்தியர்கள் உள்ளனர். அங்கு இருக்கும் அபாயகரமான சூழலை உணர்ந்து அவர்களை மீட்பதற்கான வேலைகளை அரசு செய்து வருகிறது" என்று குறிப்பிட்டார்.