ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2-வது நாளாக நேற்று அதிகாலை தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
ராணுவ முகாம் மீதான இத்தாக்குதலை தொடர்ந்து, 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி ( மஜக) - பாஜக கூட்டணி ஆட்சி கடந்த மார்ச் 1-ம் தேதி பதவியேற்றது. அதன்பிறகு காஷ்மீரில் முதல் தாக்குதல் சம்பவமாக, கதுவா மாவட்டத்தில் உள்ள ராஜ்பாக் போலீஸ் நிலையத்துக்குள் நேற்றுமுன்தினம் காலை தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டனர்.
ராணுவ வீரர்கள் விரைந்து சென்று பதிலடி கொடுத்தனர். நான்கு மணி நேரத்துக்கு மேல் நடந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 11 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அந்தப் பகுதியில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சம்பா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நேற்று அதிகாலை 5.50 மணிக்கு திடீர் தாக்குதல் நடத்தினர். ஜம்மு - பதான்கோட் நெடுஞ்சாலையில் மெஷ்வாரா பகுதியில் இந்த ராணுவ முகாம் உள்ளது. தீவிரவாதிகள் இந்த முகாம் மீது கையெறி குண்டுகளை வீசினர். உஷார் அடைந்த ராணுவ வீரர்கள் திரும்பி தாக்குதல் நடத்தினர். இருதரப்பு சண்டையில் வீரர்கள், பொதுமக்களில் யாருக்கும் பாதிப்பில்லை என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் மனீஷ் மேத்தா கூறும்போது, ‘‘கதுவா போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய அதே கும்பலைச் சேர்ந்த தீவிரவாதிகள்தான், ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினார்களா என்று கூறுவது கடினம். இந்த மோதலில் யாருக்கும் காயமில்லை. சண்டையின் போது அந்தப் பக்கம் சென்ற ஒருவர் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததால் காயம் அடைந்தார். தவிர துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அவர் காயம் அடையவில்லை’’ என்று உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறும்போது, ‘‘ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்றார்.
காஷ்மீரில் மஜக - பாஜக கூட்டணி அரசு பதவியேற்ற பின் நடக்கும் 2-வது தாக்குதல் இதுவாகும்.