இந்தியா

ராகுல் வேவு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: காங்கிரஸ் அறிவிப்பு

பிடிஐ

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கட்சிப் பணிகளில் இருந்து விடுபட்டு ஓய்வில் இருப்பதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. அவர் எங்கிருக்கிறார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டுக்கு அண்மையில் சென்ற போலீஸார், அவரின் தோற்றம், கண்களின் நிறம், தலைக்கேசத்தின் நிறம் ஆகியவை குறித்து விசாரித்துள்ளனர்.

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா டெல்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: குஜராத் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் வேவு பார்க்கப்பட்டார்கள். தற்போது நரேந்திர மோடியும் அமித் ஷாவும் டெல்லி வந்திருப்பதால் அவர்கள் இங்கேயும் வேவு படலத்தை தொடங்கியுள்ளனர்.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்களின் தொலைபேசி, செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன. அவர்கள் தொடர்ந்து வேவு பார்க்கப்படுகின்றனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் டெல்லி போலீஸாரால் வேவு பார்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் விளக்கம் அளிக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எழுப்பும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT