டெல்லி பாலியல் சம்பவம் தொடர்பாக பிரிட்டன் படத் தயாரிப் பாளர் எடுத்த ஆவணப்படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இவ்வழக்கின் குற்றவாளி ஒருவர் திஹார் சிறைக்குள்ளிருந்து அளித்த பேட்டி தொடர்பாக, சிறையினர் இயக்குநரிடம் அறிக்கை சமர்ப்பிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 16, 2012-ல் ஓடும் பேருந்தில் 23 வயது இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத் தியது. இச்சம்பவத்தை பிரிட்டனைச் சேர்ந்த படத் தயாரிப்பாளரும் ‘பாப்டா’ விருது பெற்றவருமான லெஸ்லி உட்வின் பிபிசியுடன் இணைந்து ஆவணப்படமாக தயாரித்துள்ளார்.
திஹார் சிறையில் இருக்கும் குற்றவாளிகளின் பேட்டிகளுடன் ‘இந்தியாஸ் டாட்டர் (இந்தியாவின் மகள்)’ எனும் பெயரில் பிபிசியில் உலக மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு முன்பாக குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ்குமார் கூறிய ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து களுடனான வீடியோ பிபிசியின் முன்னோட்ட செய்தியாக வெளி யானது.
இதைத் தொடர்ந்து, குற்றவாளி களை படத்தின் தயாரிப்பாளர் திஹார் சிறையில் சந்தித்து பேட்டி எடுக்க அனுமதிக்கப்பட்டது எப்படி என சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், திஹார் சிறை இயக்குநர் ஜெனரல் அலோக் வர்மாவிடம் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் திகார் சிறை அதிகாரிகள் கூறும் போது, ‘அப்போதைய இயக்குநர் ஜெனரல் விமலா மெஹ்ரா இப்பேட்டிக்கு அனுமதி அளித்திருந்தார். இதற்காக குற்றவாளிகளின் வழக்கறிஞரிடம் ஓர் ஒப்பந்தம் இடப்பட்டது. அதில் உட்வின் எடுக்கும் பேட்டிகளை சிறை அதிகாரிகளிடம் காண்பித்து அனுமதிக்கப்பட்ட பின் வெளியிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இது மீறப்பட்டுள்ளது” என்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் நிர்பயாவின் தந்தை கூறும்போது, “குற்றம் செய்த வருக்கு குறித்த நேரத்தில் தண்டனை அளிக்கப்படாததால் அவர் மனம் போன போக்கில் பேசியுள்ளார். அவர் செய்த குற்றத் துக்கான முழுக் காரணத்தையும் பெண்கள் மீது சுமத்தியுள்ளார். இவர்களை வைத்து திரைப்படம் எடுக்க அனுமதி கிடைத்தது எப்படி என்பது தெரியவில்லை” என்றார்.
போலீஸார் வழக்கு பதிவு
டெல்லி பாலியல் சம்பவம் குறித்த ஆவணப்படப் படப் பிடிப்பை திகார் சிறையில் நடத்தியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெயர் தெரியாத நபர்கள் மீது நம்பிக்கையை மீறி செயல்படுதல் மற்றும் பெண் சமூகத்தை மானபங்கபடுத்த முயன்றது ஆகிய புகார்களில், ஐபிசி 404, 405, 406 மற்றும் 409 ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி போலீஸார் இந்த வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து டெல்லியின் காவல் துறை ஆணையர் பி.எஸ்.பாஸி கூறும்போது, “இந்திய ஊடகங்கள் சர்ச்சைக்குரிய இந்த ஆவணப்படத்தை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள் கிறோம். மார்ச் 8-ல் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்” என்றார்.