இந்தியா

பேரிடர் மேலாண்மையில் மற்ற நாடுகளுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது: உள்துறை அமைச்சர் அறிவிப்பு

பிடிஐ

பேரிடர் மேலாண்மையில் மற்ற நாடுகளுக்குத் தன் அனுபவங்களின் மூலம் உதவ இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நேற்று பேரிடர் மேலாண்மை குறித்து மூன்றாம் உலக மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ராஜ்நாத் சிங் கூறியதாவது:

பேரிடர் மேலாண்மையில் ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயலாற்ற இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளது. இதுதொடர்பாக எங்களின் அனுபவங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறோம்.

பேரிடர்களைச் சமாளிப்பதில் அதற்கென்று உள்ள நிபுணத்துவம் வாய்ந்த அமைப்புகளின் உதவியை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், பாரம்பரிய தொழில்நுட்ப அறிவையும், மக்கள் நலம் சார்ந்த வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்தியாவைப் பொறுத்த வரையில் வளர்ச்சிக் கொள்கை யின் அனைத்து மட்டங்களிலும் பேரிடர் அபாயங்களைக் குறைக்கும் திட்டங்களை வைத்துள்ளோம். அதன் மூலம் பைலின் புயல் உருவான‌போது ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை 44 என்ற எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்த எங்களால் முடிந்தது.

இது 1999ம் ஆண்டு இந்த மாநிலத்தில் புயல் உருவானபோது ஏற்பட்ட 8,900 உயிரிழப்புகளை விட மிக மிகக் குறைவாகும். இந்த அளவுக்கு உயிர்ச் சேதங்களைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு நாங்கள் தொடர்ந்து பல்வேறு வகையான திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததே காரணமாகும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் புயலைத் தாங்கும் திறன் கொண்ட வீடுகளைக் கட்டியதோடு, மக்களை அபாயகரமான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியையும் மேற்கொண்டோம்.

பேரிடர் ஆபத்துகளைக் குறைக்க அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அமைப்புகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT