மத்திய பிரதேச நிதியமைச்சர் ஜெயந்த் மலையா மற்றும் அவரது மனைவியிடம் ஓடும் ரயிலில் சாதூர்யமாக கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மதுரா ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் நிதியமைச்சர் ஜெயந்த் மலையா மற்றும் அவரது மனைவி சுதா மலையா ஆகியோர் டெல்லிக்கு ஜபால்பூர் - நிஸாமுதீன் விரைவு ரயிலில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களது ஏசி தனிப்பெட்டிக்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல் அவர்களிடமிருந்து தங்கச் சங்கிலி, மோதிரம் மற்றும் பணத்தை மிரட்டி கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து பணியில் இருந்த 3 ரயில்வே ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் அனில் சக்சேனா கூறியுள்ளார்.
இந்தத் துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் கூறிய ஜெயந்த் மலையாவின் மனைவி சுதா, "ஜபால்பூர் - நிஸாமுதீன் விரைவு ரயிலில் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அப்போது அதிகாலை 4 மணியளவில் எங்களது ஏ.சி. பெட்டியின் கதவை யாரோ தட்டினர்.
நான் கதவை திறந்தபோது, ஒருவர் கத்தியுடன் அத்துமீறி உள்ளே நுழைந்தார். அவர் பின்னே மேலும் 4 பேர் நுழைந்தனர். எனது பணப் பை, சங்கிலி ஆகியவற்றை அவர்கள் பிடுங்கி கொண்டனர். மோதிரத்தை கழட்டும்படி மிரட்டினர். நான் பயந்து கழட்டியபோது அது அவிழவில்லை. உடனே அவர்கள் எனது விரலை வெட்டி விடுவதாக கூறினர்.
வேகமாக எனது விரலிலிருந்து மோதிரத்தை கழட்ட முயற்சித்தனர். ஆனால் அவர்களாலும் முடியவில்லை. பக்கத்து பெட்டிகளில் இருந்தவர்களிடம் அவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
ரயில்வே அதிகாரிகளால்தான் உயிர் தப்ப முடிந்தது. யாரே ஒரு பயணி அவசர கம்பியை இழுத்துள்ளார். உடனடியாக ரயில்வே போலீஸார் வந்ததும் கொள்ளையர்கள் ஓடிவிட்டனர்" என்றார்.
மத்திய பிரதேசத்தின் நிதியமைச்சர் ஜெயந்த் மலையாவின் மனைவி சுதா, பாஜக உறுப்பினர் ஆவார். இந்தச் சம்பவம் குறித்து பாஜக எம்.பி. பிரகலாத் படேல் நாடாளுமன்றத்தில் பேசியநிலையில், இது குறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை சந்தித்து தான் பேச உள்ளதாகவும் சுதா தெரிவித்தார்.