இந்தியா

டிச.16 பலாத்கார குற்றவாளியின் பேட்டி ஒளிபரப்பை நிறுத்த நடவடிக்கை: மத்திய அரசு

ஐஏஎன்எஸ்

சர்ச்சையைக் கிளப்பியுள்ள டெல்லி பலாத்கார குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டியை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை செய்ய தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளதாக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மேலும், இந்தப் பேட்டியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என்று அவர் உறுதி அளித்தார்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், "சர்ச்சையைக் கிளப்பியுள்ள டெல்லி பலாத்கார குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டியை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

2013-ல் அனுமதி

நிர்பயா ஆவணப்படத்தை எடுக்க 2013 ஜூலையில் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது. நிர்பயா தொடர்பான ஆவணப்படத்தால் தனிப்பட்ட முறையில் மிகுந்த வேதனையடைந்துள்ளேன்.

டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் போன்ற நிகழ்வுகளை வர்த்தக ஆதாயத்துக்காக பயன்படுத்துவதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

பிபிசி-யின் சேனல் 4-ல் இந்த ஆவணப்படம் மார்ச் 8-ம் தேதி ஒளிபரப்பபடவுள்ளதாக அரசுக்கு தகவல் வந்தது. 2012 பாலியல் பலாத்கார சம்பவத்தை வன்மையாக கண்டிக்கும் அரசு, அது தொடர்பான ஆவணப்படம் ஒளிபரப்பப்படுவதை தடுக்க நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளது.

குற்றவாளி முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்த விஷயத்தில் விதிமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். முன்னதாக, இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை 15 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

திகார் சிறை அதிகாரிக்கு சம்மன்:

இதற்கிடையில், சர்ச்சை பேட்டி தொடர்பாக டெல்லி திகார் சிறை இயக்குநர் ஜெனரல் அலோக் குமார் வர்மா நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்மன் அனுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT