இந்தியா

வாக்குகள் சரிவுக்கான காரணத்தை ஆராய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு

செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கட்சி மாநில கமிட்டியின் இரு நாள் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை முடிந்தது. இந்த ஆலோசனை தொடர்பாக கட்சியின் மாநில செயலர் பினராயி விஜயன் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலில் கேரளத்தில் எதிர்பார்த்த வெற்றி இடதுசாரி முன்னணிக்கு கிடைக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். எந்த காரணத்தினால் வாக்கு வங்கி சரிந்தது என்பதை கட்சி ஆராயும். நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு அமையும் என்கிற அச்சம் சிறுபான்மையினரை ஒற்றுமைப்படுத்தியது. அதுதான் சில தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக அமைந்தது.

இருப்பினும் கிறிஸ்தவ, முஸ்லிம் சிறுபான்மையினர் முற்றிலுமாக ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு கொடுத்து விடவில்லை.

மாநிலத்தில் சிறுபான்மையினர் ஓரணியாக தனித்து நின்றனர் என்று கூறப்படுவதை ஏற்க முடியாது. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை மிக்க இடுக்கி, சாலக்குடியில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றதை இதற்கு ஆதாரமாக கூறலாம்.

கேரளத்தில் அதிக வாக்குகளை பெற முடிந்துள்ளதாக மாயத் தோற்றத்தை பாஜக ஏற்படுத்துகிறது. இவ்வாறு தெரிவித்தார் பினராயி விஜயன்.

SCROLL FOR NEXT