ஊழல் வழக்கில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றிய முன்மொழிவை காலதாமதம் செய்யாமல் உரிய நேரத்தில் அனுப்பி வைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தண்டனை விதிப்பது தொடர்பான முன்மொழிவுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓய்வு பெறுவதற்கு ஒன்று அல்லது 2 மாதங்கள் உள்ள நிலையில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதுபோன்ற முன்மொழிவை உரிய நேரத்தில் அனுப்பி வைக்க வேண்டும் என்பதை மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவேளை குறைவான கால அவகாசம் இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசு அதிகாரிகள் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையை நேரில் அணுகி முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும்.அப்போது, தாமதத்துக்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்க வேண்டும். அவர்கள் சொல்லும் காரணம் உண்மையானதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஊழல் வழக்கில் சிக்கியதன் காரணமாக, கட்டாய ஓய்வு, பணி நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் ஆகிய தண்டனை விதிக்க வாய்ப்புள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றிய முன்மொழிவை அவர்கள் ஓய்வு பெறுவதற்கு 9 மாதங்களுக்கு முன்பு அனுப்ப வேண்டும். விதிவிலக்காக 6 மாதங்களுக்கு முன்பாவது அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கட்டாய ஓய்வு, பணி நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் ஆகிய தண்டனை விதிக்க வாய்ப்புள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றிய முன்மொழிவை அவர்கள் ஓய்வு பெறுவதற்கு 9 மாதங்களுக்கு முன்பு அனுப்ப வேண்டும்.