இந்தியா

டெல்லி மின்சாரக் கட்டணம் குறைப்பில் அரசியல்: வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க கேஜ்ரிவால் முடிவு

ஆர்.ஷபிமுன்னா

டெல்லியில் மின்சாரக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே அரசியல் மோதல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் உண்மை நில வரத்தை மக்கள் அறிவதற்காக, மின் சாரத் துறையின் தற்போதைய நிலைமை குறித்து மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க முடிவு செய் துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு டெல்லியில் 49 நாள் ஆட்சி செய்த கேஜ்ரிவால், 400 யூனிட் வரை மின்சாரம் பயன் படுத்துவோருக்கு கட்டணத்தை பாதி யாகக் குறைத்தார். ஆனால் அவரது ராஜினாமாவுக்கு பின் மின்கட்டணம் மீண்டும் முந்தைய நிலைக்கு மாறியது.

குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் டெல்லி இருந்தபோது, முதலில் காங்கிரஸும், பின்னர் பாஜகவும் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந் தன. எனவே மின் கட்டணம் மாறிய தற்கு இக்கட்சிகளே காரணம் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த கேஜ்ரிவால் அரசு, மின்கட்டணம் குறைப்பு தொடர்பான தனது பழைய அறிவிப்பை மார்ச் 1 முதல் மீண்டும் அமல்படுத்தியது.

இதற்கு பாஜக மாநிலத் தலைவர் சத்திஷ்சந்த் உபாத்யா, சட்டப்பேரவை பாஜக தலைவர் விஜேயந்தர் குப்தா ஆகியோர் 400 யூனிட் வரை அல்லாமல் அனைவரது கட்டணமும் குறைக்கப்பட வேண்டும் எனக் கோரினார்.

இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர், பிரதமர் மோடி மானியம் அளித்தால் அனைவருக்கும் கட்டணக் குறைவு அளிக்கத் தயார் என்று அறிவித்தனர்.

இதற்கு பாஜகவினர், “கட்டணக் குறைப்பை டெல்லி அரசே செய்ய முடியும். மத்திய அரசு மானியம் அளித்தால்தான் முடியும் என்று கூறுவது சரியல்ல” என்று அரசியல்ரீதியான மோதலை கிளப்பினர்.

இந்நிலையில் டெல்லி மின்சாரத் துறையின் தற்போதைய நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை சமர்ப் பிக்க கேஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் ‘தி இந்து’விடம் கூறும் போது, “மின் கட்டணத்தை அனைவ ருக்கும் குறைக்க வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கைக்கு எங்கள் அரசு தடையாக இருப்பது போல் ஒரு தோற்றம் நிலவுகிறது. எனவே, மின்சாரத் துறையின் கடந்த 15 ஆண்டு நிலைமை குறித்து 3 மாதங்களில் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளோம். இதில், டெல்லி அரசின் மின்சாரம் தயாரிக்கும் வசதியை தனியாருக்கு அளித்தது, மின்சார விநியோகத்தில் அதிக லாபம் பார்க்கப்படுவது உட்பட அனைத்து காரணங்களும் மக்கள் முன் வைக்கப்படும்” என்றனர்.

டெல்லி சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது இந்த வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

தண்ணீர் கட்டணத்தில் மேலும் ஒரு சலுகை

டெல்லியில் தண்ணீர் கட்டணத்தில் நுகர்வோருக்கு நேற்று முன் தினம் மேலும் ஒரு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களால் செலுத்தப்படாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ரூ. 2,024 கோடிக்கு அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.186 கோடியை தள்ளுபடி செய்வதாக கேஜ்ரிவால் அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்துவோருக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிவிப்பு கடந்த 2013-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் காங்கிரஸ் அரசாலும் அறிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT