இந்தியா

சாரதா நிதி மோசடி வழக்கு: நிறுவனத் தலைவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

பிடிஐ

சாரதா குழும‌ நிதி மோசடி விவகாரத்தில், அதன் தலைவர் சுதிப்தா சென், 14 நாட் களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட தார்ஜிலிங் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதம், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் குபீர் ராய் என்பவர், தான் சாரதா குழுமத்தால் மோசடி செய்யப்பட்டதாக வழக்கு ஒன்றை தார்ஜிலிங் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

ஆனால் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே சாரதா குழுமம் மூடப் பட்டுவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பலரும் போலீஸில் புகார் அளித்தனர். ஆனால் அந்த எல்லா புகார்களையும் ஒரே புகாராகக் கருதி போலீஸார் விசாரணை நடத்தத் தொடங்கினர்.

பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்ததைத் தொடர்ந்து, சாரதா குழுமத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 2014ம் ஆண்டு அக்குழுமத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலம் முழுக்க உள்ள நீதிமன்றங்களில் சுதிப்தா சென்னுக்கு எதிராக வழக்கு நடைபெற்று வந்ததால், தார்ஜிலிங் நீதிமன்றம் அவரை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு ஓர் ஆண்டாகி யும் அதனை செயல்படுத்த முடியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தார்ஜிலிங் நீதிமன்றத்தில் சென் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. மேலும், ஏப்ரல் 2ம் தேதியும் அவரை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT