சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார்.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் இன்று (வெள்ளிக் கிழமை) விசாரணைக்கு வந்தது. 38-வது நாளாக இன்று விசாரணை நடைபெறுகிறது.
அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் 6-வது நாளாக இறுதி வாதத்தில் ஈடுபட்டார். உணவு இடைவேளைக்கு முன்னதாக இறுதி வாதத்தை நிறைவு செய்தார். தற்போது, ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வர் ராவ் இறுதி தொகுப்புரை வழங்கி வருகிறார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் தனது இறுதி வாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இன்று மாலையே வழக்கின் மீது தீர்ப்பு வழங்கும் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நீதிபதி அதிருப்தி:
நீதிபதி குமாரசாமி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் பதில் அளிக்காததால் அவரது வாதம் திருப்தி அளிப்பதாக இல்லை என நீதிபதி கூறினார்.
அதற்கு பதிலளித்த பவானி சிங், "பதில் அளிக்காத கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கிறேன். இப்போது என் வாதத்தை நிறைவு செய்து கொள்கிறேன்" என தெரிவித்தார்.