இந்தியா

காஷ்மீரில் மழை குறைந்தது: ஜீலம் நதி பகுதியில் நீங்கியது வெள்ள அபாயம்

பிடிஐ

காஷ்மீர் மாநிலம் ஜீலம் நதியில் வெள்ளம் படிப்படியாக குறைந்து நீரோட்டம் அபாய அளவுக்கு கீழ் வந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மிதமான அளவே மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த நான்கு நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், ஜீலம் நதியில் வெள்ளம் அபாயகட்டத்தைத் தாண்டிப் பாய்ந்துவந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியிலும், ஜம்முவில் சில பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. நான்கு வீடுகள் இடிந்து விழுந்ததில் 16 பேர் பலியாயினர்.

கடந்த செப்டம்பர் மாதம் ஜீலம் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், காஷ்மீரில் பெரும் சேதம் ஏற்பட்டது. நூற்றாண்டு காணாத வெள்ளத்தால் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். பல கோடி மதிப்பிலான பயிர்கள் நாசமாகின.

மக்கள் அந்த அச்சத்தில் இருந்து மீள்வதற்குள் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த கனமழையால், ஜீலம் நதியில் மீண்டும் வெள்ளம் பெருகிறது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி ஜீலம் நதியில் வெள்ளம் படிப்படியாக குறைந்து அபாய அளவுக்கு கீழ் வந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஜீலம் நதியில் தற்போதைய நிலவரப்படி நீர் பாயும் உயரம் 16.4 அடியாக உள்ளது. இதுவே 24 மணி நேரத்துக்கு முன்னதாக 22.80 அடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலைமை கட்டுக்குள் உள்ளது: ராஜ்நாத் சிங்

காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும். தற்போது நிலவும் வானிலை சூழலால் கடந்த ஆண்டு ஏற்பட்டதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லையென்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், "கடந்த முறைபோல் நிலைமை மோசமாக இல்லை. வெள்ள நிலவரத்தை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. தேவைப்பட்டால் கூடுதல் உதவி செய்யவும் தயாராக இருக்கிறது. வானிலை சீராக இருப்பதால் ஜீலம் நதியில் நீரோட்டம் கட்டுக்குள் உள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT