ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜிசாட்-6, ஜிசாட்-6 ஏ ஆகிய செயற்கை கோள்களை பயன் படுத்தி எஸ்-பாண்ட் அலைவரிசை மூலமாக செல்போன்களில் வீடியோ, எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட சேவைகளை வழங்க இஸ்ரோவின் வர்த்தக அமைப்பான ஆன்ட்ரிக் சுடன் தேவாஸ் நிறுவனம் 2005-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
இதில் தேவாஸ் நிறுவனம் ரூ.578 கோடி லாபம் பெறுவதற்கு ஆன்ட்ரிக்ஸ் அதிகாரிகள் வழி வகுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து கடந்த 16-ந்தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், ஆன்ட்ரிக்ஸ் நிறுவன முன்னாள் முதன்மை இயக்குநரும், விஞ்ஞானியுமான ஸ்ரீதரமூர்த்தி உள்ளிட்ட சில விஞ்ஞானிகள், தேவாஸ் தனியார் நிறுவன ஆலோசகர்களான ஆர்.விஸ்வநாதன், ஜி.சந்திரசேகர் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 120-பி (குற்ற சதி) மற்றும் 420 (மோசடி) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீதரமூர்த்தயின் பெங்களூர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தி னார்கள். இதுதவிர தேவாஸ் நிறுவனத்தின் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களிலும் சிபிஐ சோதனை நடந்தது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக இருந்த இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் இந்த புகார் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.