இந்தியா

மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தார் பிரதமர் நரேந்திர மோடி

சுகாசினி ஹைதர்

மாலத்தீவில் நிலவும் உள்நாட்டுச் சர்ச்சைகளுக்கு இடையே, மோடி அங்கு செல்வதை அரசு விரும்பவில்லை என டெல்லி நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி தனது 4 நாடுகள் பயணத்திட்டத்தில் இருந்து மாலத்தீவை தவிர்த்துள்ளார். மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நசீது கைது செய்யப்பட்டது உள்ளிட்ட அந்நாட்டில் நிலவும் சர்ச்சைகள் காரணமாகவே அவர் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துள்ளதாகத் தெரிகிறது.

பிரதமர் மோடி அடுத்த வாரம் தனது பயணத்தை துவக்குகிறார். இலங்கை, மொரீஷியஸ், செசல்ஸ் உள்ளிட்ட தீவு நாடுகளுக்கு அவர் செல்கிறார்.

இது தொடர்பான வெளியுறவு அமைச்சக இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பிரதமர் மோடி, செசல்ஸ் தீவுக்கு மார்ச் 11-ல் செல்கிறார். அங்கிருந்து மொரீஷியஸ் பயணிக்கிறார். அந்நாட்டு தேசிய விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து இலங்கைக்கு 2 நாள் பயணம் மேற்கொள்கிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவு பயணம் ரத்தானதற்கான காரணத்தை இப்போது விளக்க முடியாது என வெளியுறவு அமைச்சகம் நழுவிவிட்டது. ஆனால், அங்கு நிலவும் உள்நாட்டுச் சர்ச்சைகளுக்கு இடையே மோடி அங்கு செல்வதை அரசு விரும்பவில்லை என அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சி கருத்து:

வெளியுறவு அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு குறித்து மாலத்தீவு அரசு அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியிடவில்லை. இருப்பினும், நசீதின் ஆதரவாளர்கள் தலைமையிலான எதிர்க்கட்சி கூறும்போது, "மோடியின் இந்த முடிவு இந்தியா - மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதையே உணர்த்துகிறது. அதிபர் யாமீனின் யதேச்சதிகார நடவடிக்கைகளே இதற்குக் காரணம். இந்தியா நெருங்கிய நட்பு நாடாக இருந்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள விரிசலை சீர்செய்ய யாமீன் அரசு விரைந்து செயல்பட வேண்டும்" என தெரிவித்தது.

மாலத்தீவு போலீஸாரின் முரட்டுத்தனம்:

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் போலீஸார் 'முரட்டுத்தனம்' காட்டியதை பதிவு செய்த வீடியோ வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்தக் கைது நடவடிக்கை பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், "மாலத்தீவில் தற்போது உள்ள அரசியல் சூழல் கவலை அளிப்பதாக உள்ளது. முன்னாள் அதிபரை கைது செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மீறிய நிலையில் காணப்படுக்கிறது. இது தவறான அணுகுமுறை" என்று இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் அதிபரை கைது செய்வதற்கு முன்பே, "இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள பஞ்ச சீல ஒப்பந்தத்தின்படி, மாலத்தீவின் உள்விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு இருக்காது என்று எதிர்ப்பார்க்கிறோம்" என்று மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் துன்யாம் மாவூன் குறிப்பிட்டிருந்தது.

இத்தகைய சூழலில் மாலத்தீவு பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளார்.

SCROLL FOR NEXT