நடிகை ஸ்ருதி ஹாசன் மீது திரைப்பட நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அவர் புதிய படங்களை ஒப்புக்கொள்ளக் கூடாது என ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கார்த்தி, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்து தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தை பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் தரப்பிலிருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு இ-மெயில் மூலமாக ஒரு தகவல் வந்துள்ளது. அதில், போதிய நேரம் இல்லாத காரணத்தால் இந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஹைதராபாத் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்தின் மனுவில், “இரு பெரிய நடிகர்களை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், ஸ்ருதி ஹாசன் முன்பணமும் பெற்றுக்கொண்டு தற்போது நடிக்க நேரமில்லை என்று கூறுவதால் கோடிக்கணக்கில் பண நஷ்டம் ஏற்படும்.
இதனால் ஸ்ருதி ஹாசன் மீது கிரிமினல் மற்றும் சிவில் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், “இந்தப் பிரச்சினை தீரும்வரை ஸ்ருதி ஹாசன் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யக் கூடாது. இது குறித்து ஹைதராபாத் நகர போலீஸார், ஸ்ருதி ஹாசன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று உத்தரவிட்டது.