இந்தியா

தேசிய செயற்குழு கூட்டத்துக்கு அட்மிரல் ராம்தாஸை அழைக்கவில்லை: பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு

ஏஎன்ஐ

“ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்துக்கு முன்னாள் கடற்படை அதிகாரி எல்.ராம்தாஸ் அழைக்கப்படவில்லை. அவர் அழைக்கப்பட்டிருந்தால் அக்கூட்டத்தில் உண்மையில் என்ன நடந்து என்று வெளியில் கூறியிருப்பார்” என்று ஆம் ஆத்மி கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன் கூறினார்.

இதுகுறித்து அவர் டெல்லியில் கூறும்போது, “ஆம் ஆத்மி கட்சியின் இதற்கு முன் நடந்த அனைத்து செயற்குழு கூட்டங்களிலும் எல்.ராம்தாஸ் அழைக்கப்பட்டுள்ளார். அவர் நேர்மையாகவும் யார் பக்கமும் சராமலும் பேசக்கூடியவர். அவர் கூட்டத்தில் பங்கேற்றால் அங்கு நடப்பதை வெளியில் கூறுவார் என்பதாலேயே அவர் அழைக்கப்படவில்லை” என்றார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து மூத்த தலைவர்களான பிரசாந்த பூஷன், யோகேந்திர யாதவ், ஆனந்த் குமார், அஜீத் ஜா ஆகியோர் கடந்த சனிக்கிழமை நீக்கப்பட்டனர். இந்நிலையில் அன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் பேசிய வீடியோ பதிவை ஆம் ஆத்மி கட்சி மறுநாள் வெளியிட்டது.

45 நிமிட இந்த வீடியோவில் தான் முதுகில் குத்தப்பட்டுள்ளதாக உணர்ச்சி பொங்க பேசிய கேஜ்ரிவால், தான் வேண்டுமா அல்லது அவர்கள் (பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ்) வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இந்த வீடியோ ‘எடிட்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என பூஷன் மற்றும் யாதவின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT