இந்தியா

கல்வித் தகுதி குறித்த தகவலை வெளியிட்ட அதிகாரிகளுக்கு மீண்டும் வேலை: ஸ்மிருதி இராணி நடவடிக்கை

செய்திப்பிரிவு

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதியினை வெளியிட்ட டெல்லி பல்கலைக்கழக அதிகாரிகள் 5 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து அறிந்த ஸ்மிருதி தகுதி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்தார்.

முன்னாள் நடிகையான ஸ்மிருதி இராணி, மத்திய மனிதவளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அமைச்சராக பதவியேற்ற உடனே ஸ்மிருதியின் கல்வி தகுதி குறித்த சர்ச்சையை காங்கிரஸ் தலைவர்கள் எழுப்பினர். இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து, "என் செயல்திறனை பார்த்து எனது தகுதியை மதிப்பிடுங்கள்" என்று ஸ்மிருதி பதிலளித்தார்.

இந்நிலையில், அவரது கல்வித்தகுதி குறித்த தகவல்களை கசியவிட்ட டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5 அதிகாரிகளை பல்கலைக்கழகம் தகுதி நீக்கம் செய்தது. இந்த நடவடிக்கைக்கு அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்த உத்தரவை, ஸ்மிருதி இராணி ரத்து செய்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் 5 அதிகாரிகளையும் மீண்டும் பணி செய்ய அனுமதிக்க அவர் உத்தரவிட்டார்.

இது குறித்து, ஸ்மிருதி இராணி, "டெல்லி பல்கலைக்கழக துணை வேந்தருக்கு, தகுதி நீக்கம் செய்த அதிகாரிகளை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தியுள்ளேன். அரசியல் வாழ்வில் ஈடுபடுவோர் வெளிப்படையாக இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் எனது கல்வி தகுதி குறித்து தகவல் வெளியானதில் தவறு ஏதும் எல்லை" என்று தனது ட்விட்டரில் பக்கத்தில் கூறி உள்ளார்.

இருப்பினும், கல்வி தகுதி குறித்த தகவல்கள் வெளியானது தொடர்பாக விளக்கம் தர டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தரை ஸ்மிருதி இராணி கேட்டுக்கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT