நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிலக்கரி சுரங்க மசோதா நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், இடதுசாரிகள் தவிர்த்து இதர கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு அளித்தன.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தனியாருக்கு ஒதுக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட நிலக்கரி சுரங்கங்களின் உரிமத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து மத்தியில் பதவியேற்ற பாஜக அரசு, நிலக்கரி சுரங்கங்களை ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்வதற்காக கடந்த ஆண்டு அவசர சட்டத்தைப் பிறப்பித்தது.
அவசர சட்டங்களுக்கு 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதால் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அவசர சட்டத்துக்குப் பதிலாக நிலக்கரி சுரங்க மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இரண்டு முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் மசோதா மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆதரவாக 117 எம்.பி.க்களும் எதிராக 69 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
திரிணமூல், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், அதிமுக, திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததால் மசோதா எளிதாக நிறைவேறியது.
காங்கிரஸும் இடதுசாரி கட்சிகளும் எதிராக வாக்களித்தன. ஐக்கிய ஜனதா தள எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்களவை ஒப்புதல்
இந்த மசோதா மக்களவையில் கடந்த 4-ம் தேதியே நிறைவேற்றப்பட்டுவிட்டது. எனினும் திருத்தப்பட்ட மசோதா மீண்டும் மக்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இருபதே நிமிடங்களில் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் வழங்கியது.
இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறியபோது, நிலக்கரி சுரங்க மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாகும், இதேபோல் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளன.
மாநில அரசுகளுடன் பேச்சு
இதனிடையே இம்மசோதா மாநில அரசுகளின் நலன்களுக்கு எதிராக உள்ளதாகவும் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய சுரங்கத் துறை செயலாளர் அனுப் கே. புஜாரி கூறியபோது, இந்த மசோதா தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.