பட்ஜெட் கூட்டத்தொடரை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலக்கரி மற்றும் சுரங்க மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக கூட்டத்தொடரை இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இன்று (புதன்கிழமை) காலை நிலக்கரி மற்றும் சுரங்க மசோதாக்கள் மீதான தேர்வுக் குழு அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
நிலக்கரி மசோதா மீதான தேர்வுக் குழு அறிக்கை எந்த வித திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமலும் ஏற்கப்பட்டது. அதேவேளையில், சுரங்க மசோதா மீதான தேர்வுக்குழு அறிக்கையில் 2 திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு ஏற்கப்பட்டது.
ஆனால் மசோதாக்களை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியது குறித்து பிரச்சினை எழுப்பி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவை கூடியவுடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் குலாம் நபி ஆசாத், தனது எதிர்ப்பை பதிவு செய்தார். தேர்வுக் குழு அறிக்கைகள் தயார் செய்யப்படது தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பிற எதிர்க்கட்சியினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இதனால் அவை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையில், இன்று காலை நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், நிலக்கரி மற்றும் சுரங்க மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக பட்ஜெட் கூட்டத்தொடரை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தள கட்சிகள் ஆதரவு இருப்பதால் மசோத்தாக்கள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.