மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நேற்று எம்.பி.க்கள் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர். அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாகவும் நேரடியாகவும் பதிலளித்தனர். அவற்றில் சில பின்வருமாறு:
படப்பிடிப்புக்கு உதவும் அமைப்பு
தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்: வெளிநாட்டு தயாரிப்பாளர்கள் இந்தியாவில் படப்பிடிப்பு நடத்துவதை ஊக்குவிக்கும் விதத்தில் அதற்கு உதவும் அமைப்பு உருவாக்கப்படும். இதுதொடர்பாக இணையதளமும் தொடங்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் 17 தேசப்பற்று திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.
எஃப்.எம்களில் செய்தி
தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்: தனியார் எஃப்.எம்.களில் செய்தி ஒலிபரப்புக்கு தற்போது அனுமதி வழங்கப்படுவதில்லை. இனிமேல் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. அகில இந்திய வானொலியின் செய்தியை, அதே முறையில் ஒலிபரப்ப அனுமதிக்கப்படுவர். இதற்கு பிரச்சார் பாரதியுடனான பரஸ்பர ஒப்பந்த நிபந்தனைகள் பொருந்தும்.
விளையாட்டுப் போட்டிகள்,போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல், வானிலை அறிக்கை போன்றவை செய்திகளாகக் கருதப்படு வதில்லை. எனவே, அவற்றை ஒலிபரப்ப அனுமதி உண்டு.
இலகு ரக போர் ஹெலிகாப்டர் தயாரிப்பு
பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்: இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில், வரும் 2017-18-ம் ஆண்டு முதல் முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும். இருப்பினும் அவை சேத்தக், சீட்டா ரக ஹெலிகாப்டர்களுக்குப் பதிலாக இவை பயன்படுத்தப்படமாட்டாது. புதிதாக தயாரிக்கப்படவுள்ள ஹெலிகாப்டர் 5.5 டன் எடையில் இரட்டை இன்ஜின் கொண்டதாக இருக்கும். ஆனால், சேத்தக், சீட்டா ரக ஹெலிகாப்டர்கள் 3 டன் எடையில் ஒற்றை இன்ஜின் கொண்டவை. புதிய ரக ஹெலிகாப்டரின் மாதிரி அனைத்து சோதனை படிநிலைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
ரூ.7,024 கோடி நேரடி காஸ் மானியம்
நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா: நேரடி மானியத்திட்டத்தில் கடந்த 4-ம் தேதி வரை 81.5 சதவீத சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். கடந்த நவம்பர் 15-ம் தேதி முதல் ரூ. 7,024 கோடி மானியமாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆதார் பதிவு கட்டாயமில்லை
திட்டத்துறை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்: இந்தியக் குடிமகன்கள் அனைவரும் ஆதார் அடையாள அட்டை பெறுவதைக் கட்டாயமாக்கும் திட்டம் தற்போது அரசிடம் இல்லை. பல்வேறு அமைச்சகங்கள் தங்கள் துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்களில் போலி பயனாளிகளை களையெடுப்பதற்காக ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக பெறுவதை ஊக்குவிக்கின்றன. இருப்பினும், ஆதார் அட்டை இல்லை என்ற ஒரே காரணத்தால் எந்தவொரு தகுதியான பயனாளிக்கும் அரசின் சலுகை மறுக்கப்படமாட்டாது.