இந்தியா

நாடாளுமன்ற துளிகள்: தேவயானி கோப்ரகடே விவகாரத்தில் பேச்சு

செய்திப்பிரிவு

நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல்வேறு கேள்வி களுக்கு அமைச்சர்கள் நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பதில் அளித்தனர். அவற்றில் சில பின்வருமாறு:

தேவயானி கோப்ரகடே விவகாரத்தில் பேச்சு

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்:

முன்னாள் தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடே விவகாரத்தில் விரிவாகக் கவனம் செலுத்தும் வகையில், இந்தியாவும் அமெரிக்காவும் அதிகாரப் பூரவ் பேச்சுவார்த்தையைத் தொடங்கி யுள்ளன. தூதரக ரீதியான அனைத்து சாதக அம்சங்கள் மற்றும் தேவயானி கோப்ரகடேவுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சி களிலும் நமது அரசு இறங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஸ்லோவேனியா, ருமேனியா, அல்பேனியா உள்ளிட்ட நாடுகளில் தூதரக அதிகாரிகளும், வேறு சில நாடுகளில் அப்துல் கலாம் போன்ற இந்தியாவின் கவுரமான குடிமக்களும் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டது போன்ற விவகாரங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அணு சக்தி பொறுப்புடைமை சட்டம்

அணுசக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்:

இந்தியாவிலுள்ள அணு உலைகளில் பாதுகாப்பு அம்சங்கள் உலகின் பிற நாடுகளைப் போலவே சிறப்பாக உள்ளன. சில நாடுகளைவிட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அணுசக்தி விபத்து பொறுப்புடைமை சட்டத்தில் திருத்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை. ஏற்கெனவே இருப்பது போன்று விநியோகஸ்தர்தான் பொறுப்பாளி. பாதுகாப்பு விஷயத்தில் சர்வதேச விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படுகின்றன.

பிரிட்டனில் காஷ்மீர் பற்றி விவாதம்

வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங்:

கடந்த செப்டம்பரில், காஷ்மீரில் அரசியல் மற்றும் மனித உரிமைகள் நிலவரம் என்ற தலைப்பில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்துள்ளது. இதுதொடர்பாக தனது கவலைகளை இந்தியா பல்வேறு நிலைகளில் பிரிட்டன் அரசிடம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் இந்தியா உறுதி கொண்டுள்ளது. அம்மாநிலத்தின் ஒரு பகுதி சட்ட விரோதமாகவும், ஆக்கிரமிப்பாகவும் பாகிஸ்தான் வசம் உள்ளது. சிம்லா உடன்படிக்கையின்படி இந்தியாவும் பாகிஸ் தானும் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சினை களையும் அமைதியான முறையில் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண்பதில் உறுதி பூண்டுள்ளன. இதில் என்ன நடந்தாலும் மூன்றாவது தரப்புக்கு இடமே இல்லை.

ரூ. 98.2 கோடியில் மின்னஞ்சல் உருவாக்கம்

தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்:

அரசு அலுவலர்கள், அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றத்துக்கு தனியார் மின்னஞ்சல் சேவைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய மின்னஞ்சல் கொள்கை யின்படி சுமார் 50 லட்சம் பயனாளர்களுக்காக அதிகாரப்பூர்வ மின்னஞ்சல்களை உருவாக்க ரூ. 98.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT