நாட்டின் பாதுகாப்பை பலப் படுத்த, ராணுவத்துக்கு ரூ.2 லட்சத்து 46 ஆயிரத்து 727 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் தாக்கல் செய்து கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ராணுவத்துக்கு ரூ.2 லட்சத்து 46 ஆயிரத்து 727 கோடி ஒதுக்க உள்ளது. எல்லாவற்றையும் விட நம் தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் மிக முக்கியம். நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான ஆயுதங்கள் இதுவரை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. பாதுகாப்புத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்குப் பாஜக அரசு ஏற்கெனவே அனுமதி வழங்கி உள்ளது.
அதேநேரத்தில இந்தியாவிலும் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும். அந்த தள வாடங்கள் நம் நாட்டு பாதுகாப் புக்கு மட்டுமன்றி ஏற்றுமதியும் செய்யப்படும். இதற்காக ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் ராணுவத்துக்குத் தேவையான கருவிகளைப் பெறுவதில் தன்னிறைவு பெற முடியும். ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மற்றும் கொள்முதல் விஷயங்களில் நாங்கள் வெளிப்படையான அணுகுமுறைகளை கையாண்டு வருவது மக்களவை உறுப்பினர் களுக்குத் தெரியும்.
இந்த ஆண்டு அதிகம்
நாட்டுக்கு அச்சுறுத்தலான எந்த விஷயத்தையும் எதிர்கொள்ள நம் ராணுவத்தை தயாராக வைத்திருக்க வேண்டும். அதற்காக ராணுவத்தின் தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் பூர்த்தி செய்துதரப்படும். எனவேதான் கடந்த ஆண்டு ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 370 கோடியில் இருந்து இந்த ஆண்டு (2015 - 16) ரூ.2 லட்சத்து 46 ஆயிரத்து 727 கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.