ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடந்ததுக்கு, பாகிஸ்தான் மற்றும் பிரிவினைவாதிகளே காரணம் என அம்மாநில புதிய முதல்வர் முப்தி சையதின் கருத்தால் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது.
ஆட்சிக்கு வந்த முதல் நாளே இப்படி ஒரு கருத்தை அவர் தெரிவித்திருப்பது தேச துரோக செயல் என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது. இதனால் மாநிலங்களவயின் செயல்பாடுகள் காலை நேரத்தில் பாதிக்கப்பட்டன.
பூஜ்ஜிய நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் சாந்தாராம் நாயக் இந்த விவகாரத்தை எழுப்பி, "ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பாகிஸ்தானுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது தேச துரோகம் ஆகும். அவர் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணத்தை முப்தி மீறிவிட்டார்.
தனது கட்சியை ஆதரித்த மக்களுக்கும் தேர்தலுக்கு பாதுகாப்பு அளித்த பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவிக்க தவறிவிட்டார்" என்றார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 12-வது முதல்வராக முப்தி முகமது சையது (79) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த டிசம்பரில் நடைபெற்றது. 87 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 25, தேசிய மாநாட்டு கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களைப் பெற்றன. மஜக-பாஜக கூட்டணி நடத்திய நீண்ட நாட்கள் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த நிலையில் 49 நாட்கள் கழித்தே பதவியேற்பு நடந்தது.
இதனிடையே முதல்வராக பொறுப்பேற்ற உடன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முப்தி சையது, "ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் அமைதியாக நடைபெற, பாகிஸ்தானும், பிரிவினைவாதிகளும், தீவிரவாதிகளும் காரணம்" என குறிப்பிட்டார்.
இவரது பேச்சால் அதிருப்தி அடைந்த பாஜக, "ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் அமைதியாக நடைபெற ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை கொண்ட மக்களும் கடும் பனியை பொருபடுத்தாது உழைத்த பாதுக்கப்புப் படையினருமே காரணம்" என்று பாஜக தரப்பும் உடனடியாக தெரிவித்தது.